Manipur Violence: அடங்காத மணிப்பூர் கலவரம்- மெய்தி சமூகத்தைச் சேர்ந்த 9 அமைப்புகளுக்கு தடை விதித்த மத்திய அரசு
Manipur Violence: மணிப்பூரில் கலவரத்தை தூண்டும் விதமாக செயல்படுவதாக கூறி மெய்தி சமூகத்தைச் சேர்ந்த, 9 அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
Manipur Violence: மணிப்பூரில் கலவரத்தை தூண்டி விடுவதாக 9 அமைப்புகளுக்கு, தலா 5 ஆண்டுகள் வீதம் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
மணிப்பூரில் 9 அமைப்புகளுக்கு தடை:
மெய்தி சமூகத்திற்கு ஆதரவாக செயல்படும் 9 தீவிரவாத அமைப்புகளுக்கு தடை விதித்து, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இவை பெரும்பாலும் மணிப்பூரை மையமாகும் செயல்படும் அமைப்புகளாகும். அதன்படி, "மக்கள் விடுதலை இராணுவம் (PLA), புரட்சிகர மக்கள் முன்னணி (RPF), ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (UNLF) மற்றும் அதன் ஆயுதப் பிரிவான மணிப்பூர் மக்கள் ராணுவம் (MPA)., சோசலிச ஒற்றுமைக்கான கூட்டணி (KYKL) காங்கிலீபாக் மக்கள் புரட்சிக் கட்சி (PREPAK) மற்றும் அதன் ஆயுதப் பிரிவு செம்படை, காங்கிலிபக் கம்யூனிஸ்ட் கட்சி (KCP) மற்றும் அதன் ஆயுதப் பிரிவு (சிவப்பு இராணுவம் என்று அழைக்கப்படுகிறது), காங்லீ யாயோல் கன்பா லுப் (KYKL), ஒருங்கிணைப்புக் குழு (CorCom) ) மற்றும் சோசலிச ஒற்றுமைக்கான கூட்டணி காங்லீபக் (ASUK)" ஆகிய 9 அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் இந்த அமைப்புகள் சட்டவிரோத சங்கங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆயுதப் போராட்டத்தின் மூலம் சுதந்திர தேசத்தை நிறுவுதல் மற்றும் இந்தியாவிலிருந்து பிரிவினையைத் தூண்டுதல் போன்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த அமைப்புகள் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
MHA declares several Meitei extremist organisations as 'unlawful associations' for 5 years under UAPA
— ANI Digital (@ani_digital) November 13, 2023
Read @ANI Story | https://t.co/yMziSmO4U3#MHA #Meitei pic.twitter.com/kKie3e6I4r
உள்துறை அமைச்சகம் சொல்வது என்ன?
உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ”மெய்தி தீவிரவாத அமைப்புகளை உடனடியாகக் கட்டுப்படுத்தவில்லை என்றால், பிரிவினைவாத, நாசகார, பயங்கரவாத மற்றும் வன்முறைச் செயல்களை அதிகரிக்கத் தங்களுக்கான ஆதரவாளர்களை திரட்டுவதற்கான பணியை மேற்கொள்வார்கள். சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மெய்தி தீவிரவாத அமைப்புகளை 'சட்டவிரோத சங்கங்கள்' என்று அறிவிக்க வேண்டியது அவசியம். அதற்கேற்ப, துணைப்பிரிவு (3) க்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்துதல் அவசியம். மேற்படி சட்டத்தின் 3வது பிரிவின்படி, இந்தச் சட்டத்தின் 4வது பிரிவின் கீழ் செய்யப்படும் எந்த உத்தரவுக்கும் உட்பட்டு, குறிப்பிட்ட 9 அமைப்புகளுக்கும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படுகிறது.
அவர்கள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு விரோதமான சக்திகளுடன் கூட்டு சேர்ந்து தேசவிரோத நடவடிக்கைகளை பரப்புரை செய்வார்கள், பொதுமக்களைக் கொன்று, காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களைக் குறிவைத்து, சர்வதேச எல்லைக்கு அப்பால் சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வாங்கக் கூடும். தங்களது சட்டவிரோத செயல்களுக்காக பொதுமக்களை மிரட்டி பணம் வசூலிப்பார்கள்” எனவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.