(Source: ECI/ABP News/ABP Majha)
Mangaluru : செலவுக்கு பணம்! மல்டிபிளக்ஸில் படம்! குறி வைத்து இளம்பெண்களை பாலியல் தொழிலில் தள்ளும் கும்பல்!
மங்களூரில் ஆசை வார்த்தைகூறி இளம் பெண்களை விபச்சாரத்தில் தள்ளியதாக அதிர்ச்சிகர தகவல் கிடைத்துள்ளது.
“செலவுக்கு பணம் வேண்டுமா? நீங்கள் ஷாப்பிங் செல்ல விரும்புகிறீர்களா? நீங்கள் மல்டிபிளெக்ஸில் படம் பார்க்க விரும்புகிறீர்களா?’’ என்று கேட்டு மால்கள், தியேட்டர்கள் மற்றும் பூங்காக்களில் சுற்றித் திரியும் இளம் பெண்களை விபச்சாரத்தில் தள்ளியதாக அதிர்ச்சிகர தகவல் கிடைத்துள்ளது.
கர்நாடகா மாநிலம் மங்களூரில் மைனர் மாணவிகளை பயன்படுத்தி மாநகரில் பெரிய அளவில் செயல்பட்டு வந்த விபச்சார கும்பல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, மைனர் பெண்களை மால்கள், தியேட்டர்கள், பூங்காக்களில் பல நாட்களாக ஒரு கும்பல் கண்காணித்து வந்துள்ளது.
அந்த கும்பல் தங்கள் குடும்பத்திற்குத் தெரிந்தவர்கள் போல முதலில் பெண்களுடன் பழக முயற்சித்து தங்கள் நட்பைத் தொடர்கிறார்கள். அதன்பிறகு தொடர்ந்து, மைனர் பெண்களை கவரும் வகையில் பணம், ஆடைகள் மற்றும் பரிசுகளை வாங்கு தருகிறார்கள்.மேலும், ஓட்டல்கள், மால்களுக்கு அழைத்துச் சென்று ஆடம்பரமாக செலவு செய்து, சொகுசு வாழ்க்கை என்ற பொறியை அந்த பெண்கள் மீது விரித்து விடுகின்றனர்.
இதையடுத்து, மைனர் பெண்கள் இவர்கள் வலையில் சிக்கியதும் மேலும் பெண்களை அழைத்து வரும்படி கேட்கிறார்கள். தொடக்கத்தில், அந்த கும்பல் பெண்களுக்கு எல்லாவற்றையும் வழங்கி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் எடுத்து விடுகின்றனர்.
பின்னர் அவர்கள் இந்த ஆதாரங்களைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி பாலியல் தொழிலில் தள்ளுகின்றனர். இதனால் குடும்ப மானத்திற்கு பயந்துப்போன சிறுமிகள் கும்பல் சொல்லும் செயல்களை செய்கின்றனர். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் அச்சமின்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொள்கிறது.
இந்த வழக்கில் சிசிபி போலீசார் ஏற்கனவே 16 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மூடுபித்ரி, உல்லல், காசர்கோடு போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளின் கூட்டாளிகள் என்றும் தெரியவந்துள்ளது.
இது குறித்து மாநகர டிசிபி ஹரிராம் சங்கர் கூறும்போது, “சிறுமிகள் வசீகரம் மற்றும் மிரட்டல் காரணமாக விபச்சாரத்தில் சிக்கிவிடுகின்றனர். பொதுவாக, பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே தொடர்பு இல்லாததுதான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளில் யாராவது சிக்கிக் கொண்டால், அவர்கள் பயப்படாமல், தங்கள் பெற்றோரிடமோ அல்லது பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடமோ தெரிவிக்க வேண்டும். இந்த நடவடிக்கை ரகசியமாக மேற்கொள்ளப்படும். எந்த சூழ்நிலையிலும் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படாது. குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்