Watch Video: 30 நிமிடத்தில் 21 பிளேட் பட்டாணி குல்சாவை சாப்பிட்ட நபர்! பரிசாக புல்லட் பைக்!
இரண்டு நாள்கள் சாப்பிடாமல் இருந்து இந்தக் கடைக்குச் செல்லும் ரஜ்னீஷ் கியானி, சவாலில் பங்கேற்று சோல் குல்சாவை சுடச்சுட உள்ளே தள்ளும் காட்சியை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குறிப்பிட்ட நேரத்துக்குள் அதிக அளவு உணவை உண்டு முடித்தீர்கள் என்றால் நீங்கள் சாப்பிட்ட உணவுக்கு பணம் தரத் தேவையில்லை என்பது போன்ற சவால்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். டெல்லியின் பல இடங்களில் இதுபோன்ற உணவு சவால்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
ரஜ்னீஷ் கியானி எனும் உணவுப் பிரியர் தன் ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் சேனல்களில் 'ஆர் யூ ஹங்கிரி' என்ற பெயரில் இதுபோன்ற சவால்களில் பங்கேற்று குறித்து பதிவிட்டு வருகிறார்.
யூடியூப் பதிவரான இவர் டெல்லியில் உள்ள சோல் குல்ச்சா எனும் உணவகத்தில் முன்னதாக நடந்த ஒரு சுவாரஸ்யமான உணவு சவாலில் கலந்துகொண்டு பகிர்ந்த வீடியோ வைரலாகி உள்ளது.
அரை மணி நேரத்தில் 21 பிளேட் மட்டர் (பட்டாணி) குல்சா சாப்பிட வேண்டும் என இந்த உணவகத்தில் சவால் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சவாலை செய்து முடித்தால் 50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படும் இல்லையென்றால் உணவுக்கான 2100 ரூபாயை கட்ட வேண்டும்.
முன்னதாக இந்த சவாலை கொஞ்சம் அப்டேட் செய்து பரிசுத் தொகையை அதிகரித்து ஒரு புதிய சவாலையும், அதற்கான அட்டகாசமான பரிசையும் அறிவித்துள்ளனர். அதன்படி 1.48 லட்சம் மதிப்புள்ள ஒரு புத்தம்புதிய புல்லட் பைக்கை இந்த சவால் மூலம் வெல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இரண்டு நாள்கள் சாப்பிடாமல் இருந்து இந்தக் கடைக்குச் செல்லும் ரஜ்னீஷ் கியானி, சவாலில் பங்கேற்று சோல் குல்சாவை சுடச்சுட உள்ளே தள்ளும் காட்சியை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக பேஸ்புக்கிலும் பகிரப்பட்ட இந்த வீடியோ 12 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலாகியுள்ளது.
இடையிடையே 6 முதல் 7 கிளாஸ் லஸ்ஸி குடித்து உணவுக்குழாயை ஃப்ரீயாக்கி ஒரு வழியாக 21 பிளேட்டுகள் குல்ச்சா சாப்பிட்டு முடித்து இறுதியாக இந்த பைக்கை ரஜ்னீஷ் கியானி வெல்கிறார்.
அரை மணி நேரத்துக்கு இடையிடையே உடற்பயிற்சி செய்தவாறு இவர் குல்ச்சா சாப்பிடும் நிலையில், சவால் விடுத்த கடைக்காரரின் நிலை பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக உள்ளது.
இந்நிலையில், தான் போட்டியில் வென்றும் கடைக்காரரைப் பார்த்து பரிதாபப்பட்டு பைக்கை வாங்கிக்கொள்ளாமல் யூடியூபர் ரஜ்னீஷ் கியானி வெறும் கையோடும் திருப்தியுடனும் திரும்புகிறார்.
காண்போரின் பசியைத் தூண்டி மனதையும் குளிர்விக்கும் இந்த வீடியோவை இணையவாசிகள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram
முன்னதாக இதே போல் உணவுப் பிரியர்களை கவரும் வகையில் ’ஹெலிகாப்டர் பேல்’ எனும் வீடியோ இன்ஸ்டாவில் ட்ரெண்ட் ஆனது.
பிரபல ஸ்ட்ரீட் ஃபுட்டான பேல்பூரியை புயல் வேகத்தில் கிளறி ஒருவர் பரிமாறும் இந்த வீடியோ நெட்டிசன்களிடையே லைக்ஸ் அள்ளியது.