Yogi Adityanath: ”ஒழுக்கம்னா என்ன?.. இந்துக்கள்ட்ட இருந்து கத்துக்கங்க” - உ.பி., CM யோகி அட்வைஸ்
Yogi Adityanath: ஒழுக்கம் என்றால் என்ன என்பதை இந்துக்களிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும் என, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார்.

Yogi Adityanath: ரம்ஜான் தினத்தன்று சாலைகளில் தொழுகை நடத்தக்கூடாது என்ற தனது அரசின் உத்தரவு சரியே என, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
யோகி ஆதித்யநாத் நேர்காணல்
உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பொது மக்களுக்கான சாலைகளில் தொழுகை நடத்துவதைத் தடை செய்யும் தனது அரசின் முடிவை ஆதரித்து, பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவை மத ஒழுக்கம் மற்றும் ஒழுங்கான நடத்தைக்கு ஒரு எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டுள்ளார்.
யோகி ஆதித்யநாத் அட்வைஸ்:
தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், வன்முறை, துன்புறுத்தல் அல்லது சீர்குலைவு போன்ற சம்பவங்கள் எதுவுமே இல்லாமல் 66 கோடி பக்தர்கள் மகா கும்பமேளாவில் கலந்து கொண்டதாக உத்தரபிரதேச முதலமைச்சர் எடுத்துரைத்தார். அதன்படி, " சாலைகளில் தொழுகை செய்வதை தடை செய்தத் குறித்து பேசுபவர்கள் பேசலாம். ஆனால், சாலைகள் நடைபயிற்சிக்கானவை. இந்துக்களிடமிருந்து ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
VIDEO | EXCLUSIVE: Uttar Pradesh CM Yogi Adityanath (@myogiadityanath) describes the state administration's decision to ban namaz on roads as right, adding that people should learn discipline from devotees who came to Prayagraj during Maha Kumbh.
— Press Trust of India (@PTI_News) April 1, 2025
"Roads are meant for walking… pic.twitter.com/XSQvRxIJRF
66 கோடி மக்கள் பிரயாக்ராஜுக்கு வந்தனர்... எங்கும் கொள்ளை இல்லை, எங்கும் தீ வைப்பு இல்லை, எங்கும் துன்புறுத்தல் இல்லை, எங்கும் நாசவேலை இல்லை, எங்கும் கடத்தல் இல்லை, இது ஒழுக்கம், இது மத ஒழுக்கம். அவர்கள் பயபக்தியுடன் வந்தார்கள், 'மகாகும்பமேளாவில் பங்கேற்றனர். பின்னர் தங்கள் இலக்கை நோக்கி நகர்ந்தனர். திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் அல்லது இதுபோன்ற ஏதேனும் நிகழ்வுகள் ஆணவத்திற்கான ஒரு ஊடகமாக மாறக்கூடாது. நீங்கள் வசதியை விரும்பினால், அந்த ஒழுக்கத்தையும் பின்பற்ற கற்றுக்கொள்ளுங்கள்” என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.
பலத்த பாதுகாப்புடன் ரம்ஜான் தொழுகை
வன்முறை சம்பவங்களை தடுக்க உத்தரபிரதேசம் முழுவதும் ரம்ஜான் தொழுகை மிகவும் பாதுகாப்புடன் நடத்தப்பட்டது. AI அடிப்படையிலான ட்ரோன் கண்காணிப்பு மற்றும் சமூக ஊடக கண்காணிப்பு ஆகியவை அடங்கும். இதற்கு மத்தியில் மீரட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய மோதலில் சிலர் காயமடைந்தனர். மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
மகாகும்பமேளாவில் குற்றங்களே இல்லையா?
மகாகும்பமேளாவில் எந்தவித குற்றச் சம்பவங்களும் அரங்கேறவில்லை என, மாநில சட்டமன்றத்திலேயே முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். ஆனால், மகா கும்பமேளாவின்போது மொபைல், செயின் மற்றும் பணப்பறிப்பு நிகழ்ந்ததாக தாராகஞ்ச் மற்றும் கும்பமேளா கோத்வாளி காவல் நிலையங்களில் 300-க்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளன. சில இருசக்கர வாகன திருட்டுகளும் அதில் அடங்கும். மகாகும்பமேளாவில் டிஜிட்டர் மோசடிகளும் நடந்ததாக வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுபோக டெல்லியை சேர்ந்த ஒருவர் தனது மனைவியை, கும்பமேளாவிற்கு அழைத்துச் சென்று கழுத்தை அறுத்து கொன்ற சம்பவமும் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

