Puneeth Rajkumar | புனித்ராஜ்குமாருக்கு சிகிச்சையளித்த டாக்டருக்கு இப்படி ஒரு சிக்கலா? போலீஸ் பாதுகாப்பு!
மறைந்த கர்நாடக சூப்பர் ஸ்டார் புனித்ராஜ்குமாரின் குடும்ப மருத்தவர் ரமணராவிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கன்னட திரையுலகின் சூப்பர்ஸ்டராக கொடிகட்டிப் பறந்தவர் ராஜ்குமார். இவரது மகன்களில் ஒருவரான புனித்ராஜ்குமாரும் தற்போதைய கன்னட சூப்பர்ஸ்டாராக வலம் வந்தவர். கர்நாடகாவில் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட புனித்ராஜ்குமார் கடந்த மாதம் 29-ந் தேதி யாரும் எதிர்பாராத வகையில் திடீரென மரணம் அடைந்தார். அவரது மரணச் செய்தி இந்திய திரையுலகையே அதிர்ச்சியடைய வைத்தது. கர்நாடகாவில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அதேசமயத்தில், புனித் ராஜ்குமாரின் மரணத்திற்கு அவரது குடும்ப மருத்துவர் அலட்சியமாக செயல்பட்டதே காரணம் என்று அவரது ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டினர். இதையடுத்து, அவரது குடும்ப மருத்துவர் ரமணராவ் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததையடுத்து, அவருக்கு கர்நாடக போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர்.
முன்னதாக, புனித்ராஜ்குமார் உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனது மனைவி அஸ்வினியுடன் இணைந்து தங்களது குடும்ப மருத்துவரான ரமணராவை நேரில் சென்று சிகிச்சைக்காக சந்தித்துள்ளார். புனித்ராஜ்குமாரை அவர் மேற்கொண்ட பரிசோதனையின்போது, புனித்ராஜ்குமாருக்கு ரத்த அழுத்தமும், இதயத்துடிப்பும் சீராக இருந்துள்ளது.நெ்சு வலியும், மூச்சுத்திணறலும் இல்லாமல் இருந்துள்ளது. ஆனால், புனித்திற்கு தொடர்ந்து வியர்த்துக் கொண்டே இருந்துள்ளது.
உடற்பயிற்சி செய்த காரணத்தால் வியர்த்துக் கொண்டே இருக்கலாம் என்றும், சோர்வாக இருப்பதாகவும் புனித் மருத்துவரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக புனித்ராஜ்குமாருக்கு ஈ.சி.ஜி. பரிசோதனையை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர். அந்த பரிசோதனயைில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதை புனித்ராஜ்குமாரிடம் தெரிவிக்காமல் அவரது மனைவி அஸ்வினியிடம் ரமணராவ் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, புனித்ராஜ்குமார் கடைசியாக அனுமதிக்கப்பட்ட விக்ரம் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்க ரமணராவ் தகவல் தெரிவித்துள்ளார். புனித்ராஜ்குமார் மாரடடைப்பு ஏற்பட்ட தகவல் தெரியாததாலும், ரத்த அழுத்தமும், இதயதுடிப்பும் சீராகவே இருந்ததாலும் அவரே நடந்து சென்று தனது காரில் ஏறி அமர்ந்துள்ளார்.
இதயத்தின் அழுத்தத்தைக் குறைப்பதற்காக காரின் உள்ளேயே அவரை படுத்துக்கொள்ளுமாறு மருத்துவர் ரமணராவ் அறிவுறுத்தியுள்ளார். கார் விக்ரம் மருத்துவமனையை 5 நிமிடங்களில் அடைந்தாலும், புனித்ராஜன்குமார் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்த காலை 11.20 மணி வரை அவருக்கு ரத்து அழுத்தமும், இதயத்துடிப்பும் சீராகவே இருந்துள்ளது.
புனித்ராஜ்குமாருக்கு நீரிழிவு நோயோ, இதயநோயோ, உயர் ரத்த அழுத்தமோ எந்த வியாதியுமே இல்லை. ஆனால், திடீரென அவர் உயிரிழந்தது பலருக்கும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒரு மாரடைப்பு ஏற்பட்ட நபரை முறையாக ஆம்புலன்சில் அனுமதித்து சிகிச்சை அளிக்காமல், காரிலே மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தியதால்தான் புனித்ராஜ்குமார் உயிரிழந்தார் என்று ரசிகர்கள் சமூகவலைதளங்களில் ஆதங்கமாக பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சமூக வலைதளங்களில் அவருக்கு கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்