Manipur MLAs: மணிப்பூர் பிரச்னைக்கு தீர்வா? பழங்குடி மக்கள் முன்வைக்கும் கோரிக்கை..நிறைவேற்றுவாரா பிரதமர்?
மணிப்பூர் விவகாரத்தால் நாடாளுமன்றமே முடங்கிய நிலையில், அதை தீர்க்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் இனக்கலவரம் இந்தியா மட்டும் இன்றி உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த இனக்கலவரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட குக்கி சோ பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மெய்தேயி ஆதிக்க சமூகத்தை சேர்ந்தவர்கள் நடுரோட்டில் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் தேசத்தின் மனசாட்சியை உலுக்கியது.
மணிப்பூரில் மூன்று மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் இனக்கலவரம்:
மணிப்பூரில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டதாக அம்மாநில அரசு தெரிவித்து வந்தாலும், தினம் தினம் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கடந்த 5ஆம் தேதி நடந்த வன்முறையில், தந்தை, மகன் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். மணிப்பூர் விவகாரத்தால் நாடாளுமன்றமே முடங்கிய நிலையில், அதை தீர்க்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
ஆனால், இதுவரை, மத்திய அரசு எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியில்தான் முடிந்துள்ளது. குக்கி சோ பழங்குடி சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் குழு, சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினர். அப்போது, மணிப்பூரில் இருந்து தனி நிர்வாகத்தை கோரி குக்கி சோ பழங்குடி மக்கள் சார்பில் அவர்களின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், மத்திய அமைச்சர் அமித் ஷா தரப்பில் இருந்து எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை என கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் தகவல் தெரிவித்தனர்.
பழங்குடி எம்.எல்.ஏக்களின் கோரிக்கை என்ன?
இந்த நிலையில், பழங்குடி மக்களுக்கு என தனி தலைமை செயலாளரும், தனி டிஜிபியை நியமிக்கக் கோரி குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 10 எம்.எல்.ஏக்கள், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் கடிதம் எழுதிய 10 எம்.எல்.ஏக்களில் 7 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள்.
பிரதமர் மோடிக்கு அவர்கள் அளித்த கோரிக்கை கடிதத்தில், "மணிப்பூரில் மூன்று மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் இன கலவரத்தை கருத்தில் கொண்டு, சுமூகமான நிர்வாகத்தை உறுதி செய்வதற்காக ஐந்து மலை மாவட்டங்களுக்கு என தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு இணையான பதவிகளை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்.
பிரச்னை தீர்க்கப்படுமா
பழங்குடியினத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ், எம்.சி.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் எம்.பி.எஸ் அதிகாரிகளுக்கு இம்பால் பள்ளத்தாக்கு ஆபத்தான இடமாக மாறியிருப்பதால், தங்கள் கடமைகளைச் செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
சூரசந்த்பூர், காங்போக்பி, சண்டல், தென்னூபல், ஃபெர்சால் ஆகிய 5 மலை மாவட்டங்களை பொறுத்தவரையில், பழங்குடி மக்கள்தான் அங்கு அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர். இந்த மலை மாவட்டங்களுக்குதான், தனி தலைமை செயலாளரும் தனி டிஜிபியும் நியமிக்கப்பட வேண்டும் என 10 எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இனக்கலவரம் காரணமாக, வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கும் மணிப்பூர் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பெரும்பாலான குகி எம்.எல்.ஏக்கள், கட்சி வேறுபாடின்றி கலந்து கொள்ள மாட்டார்கள் என கூறப்படுகிறது.