கொல்கத்தா மருத்துவர் வழக்கு.. கையில் எடுத்த உச்ச நீதிமன்றம்.. செவ்வாய்கிழமை காத்திருக்கும் சம்பவம்!
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க உள்ளது.
![கொல்கத்தா மருத்துவர் வழக்கு.. கையில் எடுத்த உச்ச நீதிமன்றம்.. செவ்வாய்கிழமை காத்திருக்கும் சம்பவம்! Kolkata Doctor molestation Murder Case Supreme Court takes suo motu cognisance hearing on August 20 கொல்கத்தா மருத்துவர் வழக்கு.. கையில் எடுத்த உச்ச நீதிமன்றம்.. செவ்வாய்கிழமை காத்திருக்கும் சம்பவம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/18/f77855060f597ad84db7d5174a050b771723986377197729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவமனை ஒன்றில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் வீதிகளில் இறங்கி பெண்கள் போராடி வருகின்றனர்.
நாட்டை உலுக்கிய கொல்கத்தா மருத்துவர் வழக்கு: மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொடூரமான சம்பவம், மக்களை கலக்கமடையச் செய்தது மட்டுமின்றி, மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மருத்துவருக்கு இழைக்கப்பட்ட கொடூரம் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் பெரும் பரபரப்பை கிளப்பி வருகின்றன.
இந்த வழக்கை விசாரித்து வரும் கொல்கத்தா உயர் நீதிமன்றம், வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி கடந்த வாரம் உத்தரவிட்டது. கொல்லப்பட்ட பெண்ணின் உடலை பார்க்க அவரின் பெற்றோரை அனுமதிப்பதில் தாமதப்படுத்தியது, பிரேத பரிசோதனை அறிக்கை, சம்பவம் நடந்த உடனேயே வழக்கின் குற்றவாளி என கூறி தன்னார்வலர் ஒருவரை கைது செய்தது என இந்த வழக்கை காவல்துறை கையாண்ட விதம் குறித்து பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
குறிப்பாக, இந்த கொடூர சம்பவத்தின் பின்னணியில் பலர் இருப்பதாக கொல்லப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரிக்க உள்ளது உச்ச நீதிமன்றம். இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, வரும் செவ்வாய்க்கிழமை, இந்த வழக்கை விசாரிக்க உள்ளது.
கையில் எடுக்கும் உச்ச நீதிமன்றம்: கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் உடலில் இருந்த காயங்களின் மூலம் இந்த குற்றச் செயலில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர். பெண் மருத்துவரின் உடலை போலீசார் அவசர அவசரமாக தகனம் செய்ததாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அதை கொல்கத்தா போலீசார் மறுத்துள்ளனர்.
அதேபோல, மருத்துவரின் உடலில் 150 மில்லி கிராம் விந்து இருந்ததாக தகவல்கள் வெளியாகின. இதன்மூலம், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு அவர் உட்படுத்தப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது. மருத்துவரின் குடும்பத்தினர் சார்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் விந்து தொடர்பான தகவல் இடம்பெற்றிருந்தது. ஆனால், இதற்கு, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)