தாத்தா மோடி.. கூல் பெர்சன்... பிரதமர் மோடிக்கு சர்டிஃபிகேட் கொடுத்த 10 வயது சிறுமி
பிரதமர் மோடியுடன் 10 வயது குழந்தை ஒன்று சிரித்த முகத்துடன் நின்று போஸ் கொடுத்த ஃபோட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரதமர் மோடியுடன் 10 வயது குழந்தை ஒன்று சிரித்த முகத்துடன் நின்று போஸ் கொடுத்த ஃபோட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த 10 வயது குழந்தை பாஜக எம்.பி. பூணம் மகாஜனின் மகள் அவிகா. தனது தாய், தந்தை, சகோதரர், பாட்டியுடன் பிரதமரை சந்தித்த அந்தச் சிறுமிக்கு பிரதமருக்கு கையால் தீட்டப்பட்ட ஓவியம் ஒன்றை பரிசாக அளித்தார்.
ஓவியத்தின் சிறப்பு..
அந்த ஓவியத்தில் ஒரு கோல மயில் இடம்பெற்றிருந்தது. அந்த மயிலை அவிகா வரைந்ததற்கான காரணமும் தெரியவந்துள்ளது. ஒருமுறை பிரதமர் அவரது வீட்டில் மயிலுக்கு இரைபோடும் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. அந்த மயிலால் ஈர்க்கப்பட்டு அதையே பிரதமருக்கு ஓவியமாக தீட்டிக் கொடுத்ததாக அச்சிறுமி கூறினார். மேலும் பிரதமர் மோடியை அவர் அஜோபா அதாவது தாத்தா என்றழைத்தார். தாத்தா என்னை ஆசிர்வதியுங்கள் என்றும் அவர் வேண்டினார். ஆசியும் பெற்றுக் கொண்டார்.
ஜோக் அடித்த பிரதமர்
இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடி பூணம் மகாஜனின் குழந்தைகள் அவிகா, ஆத்யாவிடம் ஜோக் அடித்து மகிழ்ந்துள்ளார். பிரதமரிடம் உரிமையாகப் பேசிய அவிகா, தாத்தா ஆத்யா எப்போதும் எனது பண்டங்களையும் சேர்த்து சாப்பிட்டு விடுகிறான் என்று செல்லமாக புகார் கூற நீ உன் சகோதரருடன் பண்டங்களைப் பகிர்ந்து உண்ண வேண்டும் என்று அறிவுரை கூறினார். மேலும் ஆத்யா செல்லும் குதிரையேற்ற பயிற்சி பற்றியும் பிரதமர் விசாரித்து தெரிந்து கொண்டார்.
பிரதமர் குழந்தைகளுடன் பேசும்போது அவிகாவிடம் அவரது பெயரின் பொருள் கேட்டார். அதற்கு குடும்பத்தினர் அனைவரும் அந்தப் பெயருக்கு சூர்யோதயம் என்று அர்த்தம் சொன்னார்கள். அப்போது குறுக்கிட்ட பிரதமர் குஜராத்தில் உள்ள அம்பாஜி கோயிலில் உள்ள அம்மனின் பெயர் அவிகா என்று சுட்டிக் காட்டினார். குஜராத்தில் இருக்கும்போது குடும்பத்துடன் அந்தக் கோயிலுக்குப்போக எப்போதுமே தான் விரும்பியதாகவும் பிரதமர் கூறினார்.
மகாஜன் குடும்பம் பாஜக உறவு பின்னணி
மகாஜன் குடும்பத்திற்கும் பாஜகவுக்கும் ஆழமான நட்புறவு உண்டு. பூணம் மகாஜனின் தந்தை பிரமோத் மகாஜன் (லேட்) பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர். பூணம் மகாஜன் மகாராஷ்டிராவில் இருந்து இருமுறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர். அவிகாவுக்கு எப்போதும் அவரது தாத்த பிரமோத் மகாஜனின் கதைகளைச் சொல்லியே வளர்த்துள்ளார் பூணம் மகாஜன்.
மிகவும் கூலான நபர்
பிரதமருடனான சந்திப்பு குறித்து கூறிய அவிகா, மோடி தாத்தா நன்றாக பேசினார். இனிமையாக பழகினார். அவர் ரொம்பவே கூல். நான் அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பினேன். அவரும் அதற்கு ஒத்துழைத்தார். என்னுடன் மட்டுமல்ல என் வீட்டில் ஒவ்வொருவருடனும் அவர் தனித்தனியாக புகைப்படம் எடுத்தார். அப்புறம் நாங்கள் அனைவரும் எடுத்துக் கொண்டோம். அரை மணி நேரம் அவர் எங்களுடன் செலவழித்தார் என்று பெருமிதமும் மகிழ்ச்சியும் பொங்கக் கூறினார்.