Amritpal Singh: காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் போலீசில் சரண்..! பஞ்சாபில் பதற்றம்..!
பஞ்சாப் போலீசாரால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் இன்று போலீசாரிடம் நேரில் சரண் அடைந்தார்.
பஞ்சாப்பில் கடந்த ஒரு மாதமாக பதற்றம் ஏற்படுவதற்கு காரணமாக இருந்தவர் காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால்சிங். இவரை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில், இன்று பஞ்சாப் போலீசாரிடம் அவர் நேரில் சரண் அடைந்தார்.
ஒரு மாதமாக காவல்துறை கண்ணில் மண்ணை தூவி வந்த அம்ரித்பால் சிங்:
கடந்த மார்ச் 18ஆம் தேதி முதல் தலைமறைவாக இருந்து வந்த அம்ரித்பால்சிங், பஞ்சாப் மோகா காவல்துறையிடம் இன்று சரண் அடைந்தார். அஸ்ஸாம் மாநிலம் திப்ருகாருக்கு அம்ரித்பால் சிங் அழைத்து செல்லப்பட உள்ளார். அவரது உதவியாளர்கள் எட்டு பேர் ஏற்கனவே தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அங்கு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சீக்கியர்களுக்கு தனி தேசம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் காலிஸ்தானின் தீவிர ஆதரவாளரான அம்ரித் பால்சிங்கை கைது செய்ய கடந்த ஒரு மாதமாக தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வாரிஸ் பஞ்சாப் டி என்ற இயக்கத்தின் தலைவராக உள்ள இவர், வெளிநாட்டுக்கு தப்பி சென்றதாக தகவல் வெளியான வண்ணம் இருந்தது. அவருக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அம்ரித்பால்சிங்கை கைது செய்ய எடுத்து வரும் ஆபரேஷனின் ஒரு பகுதியாக தொடர் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையே, அம்ரித்பால் சிங், மாறுவேடத்தில் இருப்பது போன்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவல்துறையிடம் சிக்காமல் ஜாக்கெட் மற்றும் பேன்ட் அணிந்தபடி அவர் சாலையில் சுற்றி திரிவது அந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது. வழக்கமாக, அவர் பாரம்பரிய சீக்கிய உடைகளைதான் அணிந்திருப்பார்.
காவல்நிலையத்தை சூறையாடிய சம்பவம்:
அம்ரித்பால் சிங்கை நோக்கி அனைவரின் கவனமும் திரும்புவதற்கு காரணமாக அமைந்தது காவல்நிலைய வன்முறை சம்பவம்தான். அம்ரித்பாலின் கூட்டாளியான லவ்பிரீத் சிங் என்பவரை பஞ்சாப் போலீசார் கைது செய்து அஜ்னாலா பகுதி சிறையில் அடைத்து வைத்திருந்தனர்.
லவ்பிரீத் சிங்கை விடுவிக்க வலியுறுத்தி, அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் கைகளில் வாள், துப்பாக்கிகளை ஏந்தியவாறு, அஜ்னாலா காவல்நிலையத்தை முற்றுகையிட்டு சூறையாடி வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து, அம்ரித்பாலை கைது செய்ய பஞ்சாப் காவல்துறை தேடுதல் வேட்டையில் இறங்கியது.
கடந்த மார்ச் 2ஆம் தேதி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு இடையே நடந்த கூட்டத்தில் அம்ரித்பால் சிங்கைக் கைது செய்யும் திட்டத்தைப் பற்றி இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது. அவரை கைது செய்ய மாநில காவல்துறை தேடுதல் வேட்டையில் இறங்குவதற்கு முன்பு, மத்திய அரசு பஞ்சாபுக்கு கூடுதல் படைகளை அனுப்பியது.
அம்ரித்பால் சிங் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் வெளிநாடுகளில் உள்ள பயங்கரவாத குழுக்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வருவதாக கூறப்படுகிறது.