வஞ்சிக்கப்படுகிறதா தென் மாநிலங்கள்? டெல்லியை அதிரவிட்ட பினராயி விஜயன்! கைக்கோர்த்த பி.டி.ஆர்.!
Pinarayi Protest: கர்நாடகாவின் போராட்டத்தை தொடர்ந்து, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசால் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு வருகிறது. குறிப்பாக, வரி பகிர்வில் தங்களுக்கு சேர வேண்டிய நிதியை தருவதில்லை என தென் மாநிலங்களில் தொடர் புகார் தெரிவித்து வருகின்றன. ஏற்கனவே ஆளுநர் விவகாரம், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியது.
வஞ்சிக்கப்படுகிறதா தென் மாநிலங்கள்?
இப்படிப்பட்ட சூழலில், வரி பகிர்வு விவகாரம், பிரச்னையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது. மாநிலங்கள் தரும் வரியிலிருந்து நிதியை பெற்றுக் கொண்டு, திருப்பி தர வேண்டிய நிதியை தருவதில்லை என தென் மாநில முதலமைச்சர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
வரி பகிர்வில் கர்நாடகாவையும் தென் மாநிலங்களையும் மத்திய அரசு பாகுபாடுடன் நடத்துவதாக கூறி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நேற்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்பட்டது.
கர்நாடகாவை சேர்ந்த எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் என பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் இன்று போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் தென் மாநில தலைவர்கள் மட்டும் இன்றி எதிர்க்கட்சிகளை சேர்ந்த பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பாஜகவுக்கு எதிராக பினராயி விஜயனுடன் கைக்கோர்த்த பிடிஆர்:
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, மாநிலங்களவை உறுப்பினரும் வழக்கறிஞருமான கபில் சிபல், தமிழ்நாடு அமைச்சரும் திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பழனிவேல் தியாகராஜன், கேரளாவை ஆளும் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) எம்எல்ஏக்கள், எம்பிக்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டத்தை தொடங்கி வைத்து பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், "கூட்டாட்சி முறையை அழித்து அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு இழப்பை ஏற்படுத்துகிறது. இதை எல்லாம் தாண்டி, பாஜக ஆளாத மாநிலங்களுக்கு எதிரான அரசியல் உள்நோக்கம் கொண்டவையாக உள்ளன.
மாநிலங்களின் உண்மையான கோரிக்கைகளை வடக்கு-தெற்கு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னையாக சித்தரிக்க சில பிரிவுகளால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது முற்றிலும் பொய்யானது, ஆதாரமற்றது. கூட்டாட்சி முறையை அழிக்க நினைப்பவர்களுக்கு எதிராகவும் வடக்கு, தெற்கு என இல்லாமல் அனைத்து மாநிலங்களையும் வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு எதிராக ஜனநாயக போராட்டம் நடத்தி வருகிறோம். இருப்பினும், நமது மக்கள் மற்றும் நமது மாநிலத்தின் நலன்களைக் கருத்தில் கொண்டு, நாங்கள் அமைதியாக இருக்க முடியாது" என்றார்.
போராட்டத்தில் பங்கேற்ற டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "மாநிலங்கள் தங்களின் உரிமைகளை கோரி ஜந்தர் மந்தருக்கு வந்து போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. பினராயி விஜயன், தன் குடும்பத்திற்காக கொஞ்சம் பணம் கேட்க வரவில்லை.
கேரளாவுக்கு வரவேண்டிய ஒதுக்கீடுகளைப் பெறவே அவர் வந்துள்ளார். சேர வேண்டிய நிதியை வழங்க மறுப்பது மட்டும் இன்றி, எதிர்க்கட்சி ஆளும் அரசாங்கங்களுக்கு இடையூறுகளை உருவாக்க ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களை பயன்படுத்துகிறது" என்றார்.