Kerala Bomb Blast :'களமச்சேரி குண்டு வெடிப்பு துரதிர்ஷ்டவசமானது’.. நாளை அனைத்து கட்சிக்கு அழைப்பு விடுத்த முதல்வர் பினராயி!
19ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தோன்றிய ஒரு கிறிஸ்துவ மத குழுவான யெகோவாவின் கூட்டம் இன்று கேரள மாநிலம் களமச்சேரியில் நடைப்பெற்றது.
கொச்சியில் உள்ள களமச்சேரியில் உள்ள மாநாட்டு மையத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.
19ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தோன்றிய ஒரு கிறிஸ்துவ மத குழுவான யெகோவாவின் கூட்டம் இன்று கேரள மாநிலம் களமச்சேரியில் நடைப்பெற்றது. அப்போது திடீரென அந்த மாநாட்டு மையத்தில் அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில், 36க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தநிலையில், இந்த களமச்சேரி குண்டு வெடிப்பு தொடர்பாக தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள முதல்வர் மாநாட்டு அரங்கில் திங்கள்கிழமை காலை 10.00 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்ததாக முதலமைச்சர் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மாநில காவல்துறைத் தலைவர் டிஜிபி ஷேக் தர்வேஷ் சாஹேப், வெடிகுண்டு வெடிப்பு சாதனம் (ஐஇடி) காரணமாக வெடித்தது என்பதை உறுதிப்படுத்தினார்.
குண்டு வெடிப்பு தொடர்பாக பேசிய முதலமைச்சர் விஜயன்:
கொச்சியில் உள்ள களமச்சேரியில் கிறிஸ்தவ மதக் குழு ஒன்றின் மாநாட்டு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த குண்டுவெடிப்பு "துரதிர்ஷ்டவசமானது" என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் விஜயன், ”குண்டு வெடிப்பு நடந்த இடத்திற்கு மூத்த காவல்துறை அதிகாரிகளுடன், மாநில டிஜிபியுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம், ஒரு பெண் உயிரிழந்துள்ளார். மேலும், இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதுகுறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மொத்த விவரங்களும் கிடைத்த பின்னர் தகவல் அளிக்கப்படும்” என்றார்.
குண்டு வெடித்து சம்பவத்தை கையில் எடுக்கும் என்.ஐ.ஏ:
என்.ஐ.ஏ புலனாய்வு முழு குழுவும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை தொடங்கி இருப்பதாக செய்தி வட்டாரங்கள் தெரிவித்தன. டிபன் பாக்ஸில் வைக்கப்பட்டிருந்த ஐஇடி வெடிகுண்டு வெடித்ததுதான் காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டுவெடிப்பு சம்பவம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மையத்தில் இருந்து கார் ஒன்று வேகமாக வெளியேறும் சிசிடிவி காட்சிகளை போலீசார் தற்போது கண்டுபிடித்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஐஇடி வெடிகுண்டு வைத்த நபரே கூட காரை ஓட்டியிருக்கலாம் என விசாரணைக் குழு சந்தேகமடைந்து இதுதொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்த நிலையில் ஒரு குண்டு தீவிரமாக இருந்ததாகவும், மற்ற இரண்டு குண்டுகள் தீவிரம் குறைந்த வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதை மத்திய உள்துறை அமைச்சகம் உறுதி செய்தனர். இதை தொடர்ந்து, குண்டு வெடித்து சில மணிநேரத்திற்கு பிறகு குண்டுவெடிப்பில் ஐஇடி பயன்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் என்.எஸ்.கே.உமேஷ், குண்டுவெடிப்பில் மொத்தம் 36 பேர் காயமடைந்ததை உறுதிசெய்து, அவர் ஒவ்வொருவரையும் அரசு மருத்துவக் கல்லூரியில் பார்வையிட்டார். காயமடைந்தவர்களில், ஒரு குழந்தை உட்பட இருவர் 50 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்டர் மெடிசிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்படுவார்கள் என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு விரைவில் குற்ற நடந்த பகுதிக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய புலனாய்வு முகமையின் கொச்சி பிரிவும் இந்த சம்பவம் குறித்த தகவல்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளது.