தீயாய் சந்தேகம்.. கணவர் வெறிச்செயல்.. குழந்தையை பெற்றெடுத்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்
கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்புதான், குழந்தை பிறந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் குழந்தையை பெற்றெடுத்த பெண் மீது சந்தேகப்பட்டு, அவரை அவரது கணவரே கொலை செய்த சம்பவம் அம்மாநிலத்தை உலுக்கியுள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்புதான், குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட கணவர் இந்த வெறிச்செயலை செய்திருப்பதாக காவல்துறை தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள், மூன்று பேரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து விரிவாக பேசிய காவல்துறை தரப்பு, "கணவரான டி. கிஷோர், காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு, தனது மனைவி பிரதீபாவை அவர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் கொடூரம்:
ஹோஸ்கோட் தாலுகாவில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்த பிரதிபாவுக்கு அக்டோபர் 28ஆம் தேதி, ஆண் குழந்தை பிறந்தது.
கிஷோர், சாமராஜநகர் நகரில் வசித்து வந்துள்ளார். கணினி அறிவியலில் பட்டம் பெற்ற பிரதீபாவுக்கும், கோலார் மாவட்டம் வீரபுரத்தைச் சேர்ந்த 32 வயதான கிஷோருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை மாலை கிஷோருக்கும் பிரதிபாவுக்கும் தொலைபேசியில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளான பிரதிபா, கதறி கதறி அழுதுள்ளார். அழைப்பைத் துண்டிக்கச் சொன்ன அவரது தாயார், சிறிது காலம் கிஷோரிடம் பேச வேண்டாம் என்று பிரதிபாவுக்கு அறிவுரை கூறினார்.
திங்கள்கிழமை, பிரதீபா தனது போனை பார்த்த போது, 150 மிஸ்டு கால்கள் இருந்துள்ளது. பின்னர், கிஷோர் தனது மாமியார் வீட்டிற்கு வந்து, பூட்டிய அறைக்குள் தனது மனைவியை அடைத்து வைத்து கொலை செய்துள்ளார். அப்போது, பிரதீபாவின் தாயார் மேல்மாடியில் இருந்துள்ளார். கிஷோர் தப்பிக்கும் முன், தனது மாமியாரிடம் தான்தான் கொலை செய்தேன் என சொல்லிவிட்டு ஓடியுள்ளார்" என தெரிவித்துள்ளது.
நடந்தது என்ன?
கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை, இதுதொடர்பாக பேசுகையில், "எனது மருமகன் ஒரு சைக்கோ. எங்கள் மகளை அவருக்குத் திருமணம் செய்து வைத்தோம். நல்லவர் என்று நினைத்தோம். இப்போது, குற்றவாளியாக மாறியுள்ளார். எங்களுக்கு நீதி வேண்டும். அவர் தண்டிக்கப்பட வேண்டும். என் மகளுக்கு நேர்ந்தது இன்னொரு பெண்ணுக்கு நடக்கக் கூடாது" என்றார்.
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. சமீபத்தில், ஷ்ரத்தா கொலை வழக்கு நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் இருக்கிறோம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது.
ஷர்த்தா கொலை வழக்கின் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே உத்தரப் பிரதேசத்திலும் மேற்குவங்கத்திலும் அதே போன்ற கொலை கொடூரம் சம்பவங்கள் அரங்கேறின. பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பெரும்பாலும் அவர்களுக்கு தெரிந்தவர்களாலேயே நடத்தப்படுவதாக அதிர்ச்சி அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் நன்கு தெரிந்த ஒருவராலேயோ அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவராலேயோ ஒரு பெண்/சிறுமி கொல்லப்படுகிறார் என ஐநா செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.