Mid Day Meal: பள்ளிகளில் இனி முட்டை மற்றும் அசைவம் வேண்டாம்: கர்நாடகாவில் அதிர்ச்சி பரிந்துரை
கர்நாடக பள்ளிகளில் மதிய உணவின் போது வழங்கப்படும் முட்டை மற்றும் அசைவ உணவுகளை நிறுத்த தேசிய கல்விக் குழு பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடக பள்ளிகளில் மதிய உணவின் போது வழங்கப்படும் முட்டை மற்றும் அசைவ உணவுகளை நிறுத்த தேசிய கல்விக் குழு பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பஷ்வராஜ் பொம்மை முதல்வராக உள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள தேசிய கல்விக் குழு, தேசிய கல்விக் கொள்கையினை செயல்படுத்த மாநில அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை வழங்கி வருகிறது. ஏற்கனவே பிதாகர்ஸ் தேற்றம் குறித்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகளும் விமர்சனங்களும் எழுந்த நிலையில், தற்போது பள்ளிகளில் மதிய உணவின் போது வழங்கப்படும், முட்டை மற்றும் அசைவ உணவுகளை நிறுத்த வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.
இதற்கு மாநில அரசின் தரப்பில் இருந்து, பள்ளிகளில் வழங்கப்படும் முட்டை மற்றும் அசைவம் குறித்த பரிந்துரையில் மாநில பாஜக அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளது. மேலும், தேசிய கல்விக் குழு வழங்கியுள்ள பரிந்துரையினை குறித்து மாநில அரசு விவாதித்து மக்களுக்கு எது தேவையோ அதனை நடைமுறைப்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், இவ்வாறான பரிந்துரைகளை அக்குழு வழங்க அனுமதிக்க வேண்டும். எந்த பரிந்துரைகளுமே வழங்கவில்லை என்றால் அந்த குழு இருந்து என்ன பயன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் கேபினெட் அமைச்சர் அஸ்வத் நாராயண்.
தேசிய கல்விக் குழு சார்பில், 'உடல்நலம் மற்றும் நல்வாழ்வு' அறிக்கையை நிம்ஹான்ஸ் குழந்தைகள் மற்றும் மனநல மருத்துவத் துறையின் தலைவர் ஜான் விஜய் சாகர் தலைமையிலான எட்டு பேர் கொண்ட குழு சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையின் படி, "இந்தியர்களின் சிறிய உடல் கட்டமைப்பைக் கொண்டுள்ளனர், முட்டை மற்றும் இறைச்சியை வழக்கமாக உட்கொள்வதன் மூலம் கொலஸ்ட்ரால் மூலம் உடலுக்குச் செல்லும் எந்த கூடுதல் சக்தியும் வாழ்க்கை முறை சீர்குலைவுகளுக்கு வழிவகுக்கிறது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வுகள் விலங்கு சார்ந்த உணவுகள் மனிதர்களின் ஹார்மோன் செயல்பாடுகளில் தலையிடுகின்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், 2019-21 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 5ன் படி இந்தியாவில் இறைச்சி உண்பது அதிகரித்து வருகிறது. 15-49 வயதுக்குட்பட்ட ஆண்களில் 83 சதவீதத்திற்கும் அதிகமானவர்களும், கிட்டத்தட்ட 71 சதவீத பெண்களும் அசைவ உணவை உண்பதாக கண்டறியப்பட்டுள்ளது. முந்தைய கணக்கெடுப்பில் இருந்து இது ஆண்களிடையே 5 சதவீதமும், பெண்களிடையே 1 சதவீதமும் அதிகம் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, மூத்த காங்கிரஸ் தலைவர் ரிஸ்வான் அர்ஷாத், குழுவின் பரிந்துரை ஏழைக் குழந்தைகளுக்கு அத்தியாவசியமான புரதச் சத்து கிடைக்காமல் செய்யும். மேலும் பாஜக தனது இந்துத்துவ "சித்தாந்தத்தின் திணிப்பு" என்று கூறியுள்ளார். மேலும் அவர், "நாட்டில் கிட்டத்தட்ட 80 சதவீதம் பேர் இறைச்சி சாப்பிடுகிறார்கள். கேள்வி என்னவென்றால், ஏழைக் குழந்தைகளுக்கு இந்த உணவுப் பொருட்களைக் கொடுக்காவிட்டால், அவர்கள் எப்படி ஆரோக்கியமாக வளருவார்கள்? குழந்தைகள் பலவீனமாக இருந்தால், நாடு எப்படி ஆரோக்கியமாக இருக்கும் என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்" எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏற்கனவே தேசிய கல்விக்குழுவின் செயல்பாடுகள் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகிவரும் நிலையில், தற்போது முட்டை மற்றும் அசைவ உணவுகளை நிறுத்த வேண்டும் என்ற பரிந்துரை, ஒரே நாடு ஒரே உணவு என்ற பாஜகவின் சித்தாந்த திணிப்பு எனவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்