Karnataka Hijab case: ஹிஜாப் அணியை தடைக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
கர்நாடகா பள்ளிகளில் மாணவிகள் ஹிஜாப் அணியை தடை விதித்திருந்தது.
கர்நாடக மாநில அரசு கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிகளுக்கு மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர கூடாது என்ற உத்தரவை பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டிருந்தது. அந்த வழக்கில் மார்ச் மாதம் 15ஆம் தேதி கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பிற்கு எதிராக மேல் முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இந்த வழக்கை நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் சுதான்ஷூ துலியா கொண்ட அமர்வு விசாரிக்க உள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கு கடந்த மார்ச் மாதம் தொடரப்பட்டிருந்தது. எனினும் இந்த வழக்கை விசாரணைக்கு அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பட்டியலிடவில்லை. இந்தச் சூழலில் உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி யுயு.லலித் தன்னுடைய முதல் நாளில் இந்த வழக்கை விசாரணைக்கு பட்டியலிட்டு உள்ளார்.
#BREAKING Hijab case listed before Supreme Court on August 29. Bench led by Justice Hemant Gupta to hear the #HijabBan cases.
— Live Law (@LiveLawIndia) August 27, 2022
Petitions challenge Karnataka HCs March decision which upheld #HijabBan in educational institutions.#SupremeCourtOfIndia #SupremeCourt pic.twitter.com/f52brq6m3U
வழக்கு பின்னணி:
ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அவசியமில்லை என்று தெரிவித்துள்ள கர்நாடக உயர் நீதிமன்றம், ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்குகளைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடைவிதித்தது செல்லும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் ஆகியோர் இந்தத் தீர்ப்பை அளித்திருந்தனர்.
தீர்ப்பின் காரணமாக அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க கர்நாடக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தட்சிண கன்னடா, உடுப்பி, ஷிவமொகா ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் 1000-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவில் பொது இடங்களில் அனைத்து வகையான போராட்டம் நடத்த, கூட்டம் கூடத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தீர்ப்பு தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கருத்துத் தெரிவித்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''இப்போதுதான் ஊடகங்கள் மூலம் வகுப்பறைகளில் ஹிஜாப் அணிவது குறித்த உயர் நீதிமன்றத் தீர்ப்பை அறிந்தேன். மத சம்பிரதாயங்களின் அடிப்படையில் ஹிஜாப் அத்தியாவசியம் அல்ல என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் மாணவர்களின் எதிர்காலம் மற்றும் கல்வி குறித்த கவலையை ஏற்படுத்தியது.
உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும். அதை நாம் (அரசு) அமல்படுத்தும்போது, எல்லோரும் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒத்துழைத்து அமைதி காக்க வேண்டும். அதுதான் சமூகத்துக்கு மிகவும் முக்கியமானது. நீதிமன்ற உத்தரவின்படி, மக்கள், அனைத்து சமுதாயத் தலைவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உத்தரவை ஏற்று மாணவர்களுக்கு கல்வி அளிக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்திருந்தார்.