(Source: ECI/ABP News/ABP Majha)
Twitter: மத்திய அரசின் விதியை பின்பற்றாத ட்விட்டர் நிறுவனம்.. குட்டு வைத்து அபராதம் விதித்த உயர் நீதிமன்றம்..!
மத்திய அரசின் அறிவுறுத்தல்களை பின்பற்ற தாமதம் செய்த காரணத்திற்காக மேலும் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆட்சேபனைக்குரிய ட்விட்டர் பதிவுகளை நீக்கக் கோரிய மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக டிவிட்டர் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மத்திய அரசின் அறிவுறுத்தல்களை பின்பற்ற தாமதம் செய்த காரணத்திற்காக மேலும் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆட்சேபனைக்குரிய பதிவுகளை நீக்க ட்விட்டருக்கு மத்திய அரசு உத்தரவு:
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான போலியான செய்திகள், ஆட்சேபனைக்குரிய பதிவுகள் போன்றவற்றை நீக்க வேண்டும் என்று டிவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அவ்வாறு பின்பற்றவில்லையெனில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தது.
மத்திய அரசின் இந்த செயல் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்று தெரிவித்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் டிவிட்டர் நிறுவனம் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. மத்திய அரசின் இந்த செயல் கருத்து சுதந்திரத்தை மீறும் செயலாகும், மேலும் ஒவ்வொரு மனிதனுக்கும் தனது கருத்துக்களை வெளிப்படுத்த சுதந்திரம் உள்ளது.
ஆனால், மத்திய அரசின் இந்த அறிவுறுத்தல்கள் கருத்துச் சுதந்த்திரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயல் எனக் கூறி, ட்விட்டர் நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
விதியை பின்பற்றாத ட்விட்டர் நிறுவனம்:
ட்விட்டர் நிறுவனத்தின் வாதத்தை நிராகரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா தீட்சித், "ட்விட்டர் வழிமுறைகளுக்கு இணங்கவில்லை. ஆனால், ஓராண்டு தாமதத்திற்குப் பிறகு, வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீங்கள் ஒன்றும் விவசாயி அல்ல. நீங்கள் ஒரு பணக்கார அமைப்பு என்பதை அறிந்து கொள்ளுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 69ஏ-வின் கீழ் இது போன்ற உத்தரவுகளை வெளியிட மத்திய அரசிற்கு அதிகாரம் உள்ளது எனக் கூறிய நீதிபதி, அத்தகைய டிவிட்டர் பதிவுகள் தேசிய பாதுகாப்பு, இறையாண்மை, சட்டம் ஒழுங்கிற்கு எதிராக இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
குட்டு வைத்து அபராதம் விதித்த கர்நாடக உயர் நீதிமன்றம்:
இதனைத்தொடர்ந்து, இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, மத்திய அரசின் அறிவுறுத்தல்களை பின்பற்ற தாமதம் செய்ததற்காக டிவிட்டர் நிருவனத்திற்கு கண்டனம் தெரிவித்து, மேலும் 50 லட்சம் அபராதமும் விதித்துள்ளார். அபராத தொகையை 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும், அதனை கட்டத் தவறினால் நாள் ஒன்றிற்கு 5000 ரூபாய் அபராதம் கூடுதலாக விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையானது 2021 ஆம் ஆண்டில், இதுபோன்று 2851 டிவிட்டர் பதிவுகளையும், 2022ஆம் ஆண்டில் 2000 க்கும் மேற்பட்ட ஆட்சேபனைக்குரிய பதிவுகளை நீக்க வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிராக ட்விட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்த நிலையில், தற்போது கர்நாடக உயர்நீதி மன்றம் மத்திய அரசிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இது, டிவிட்டர் நிருவனத்திற்கு பெரும் பின்னடைவை தந்துள்ளது.