ஒரே நேரத்தில் இரண்டு நிகழ்ச்சிகள் ஏன்? சின்னசாமி மைதானம் கூட்ட நெரிசல்.. கொதித்த நீதிபதிகள்
இந்த துயரச் சம்பவம் தடுக்கப்பட வேண்டியதா? எதிர்காலத்தில் இது நடக்காமல் இருக்க என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

ஒரே நேரத்தில் இரண்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது ஏன்? என்றும் மாநில அரசின் சார்பாக மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன என்றும் கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி எழிப்பியுள்ளது.
கொதித்தெழுந்த உயர் நீதிமன்றம்:
பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானம் அருகே கூட்ட நெரிசல் காரணமாக 11 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது. ஐபிஎல் தொடரில் வெற்றி பெற்ற பெங்களூரு அணிக்கு சின்னசாமி மைதானத்தில் நேற்று பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
முதலில், கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் இருந்து சின்னசாமி மைதானம் வரை ஆர்சிபி அணிக்கு வெற்றி பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், பாதுகாப்பு காரணங்களால் அந்த பேரணி ரத்து செய்யப்பட்டது. இருந்தபோதிலும், ஆர்சிபி வீரர்களை பார்ப்பதற்காக சின்னசாமி மைதானத்தை சுற்றி ரசிகர்கள் குவிந்தனர்.
கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் கர்நாடக அரசின் சார்பாகவும் சின்னசாமி மைதானத்தில் கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பாகவும் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த சூழலில், சின்னசாமி மைதானம் அருகே கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது.
ஒரே நேரத்தில் இரண்டு நிகழ்ச்சிகள் ஏன்?
மைதானத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கை 34,000ஆக உள்ள நிலையில், கிட்டத்தட்ட 8 லட்சம் பேர் மைதானம் அருகே கூடியதாக கர்நாடக மாநில அரசு தெரிவித்தது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது.
வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி வி. காமேஸ்வர் ராவ் மற்றும் நீதிபதி சி.எம். ஜோஷி ஆகியோர் கொண்ட அமர்வு, "இந்த துயரச் சம்பவம் தடுக்கப்பட வேண்டியதா? எதிர்காலத்தில் இது நடக்காமல் இருக்க என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
ஒரே நேரத்தில் இரண்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது ஏன்? மாநில அரசின் சார்பாக மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன?" என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது. அப்போது பதில் அளித்த தலைமை வழக்கறிஞர்
பெங்களூருவில் இருந்து மட்டுமல்ல, மாநிலம் முழுவதிலுமிருந்து மட்டுமல்ல, வெளியூர்களிலிருந்தும் கூட மக்கள் வந்திருந்தனர். நுழைவு இலவசம் என அறிவிக்கப்பட்டதால் மைதானத்திற்குள் 2.5 லட்சம் பேர் வந்தனர். மற்றவர்களைப் போலவே நாங்களும் இதைப் பற்றிக் கவலைப்படுகிறோம். முதலமைச்சரின் முதல் அறிக்கையிலேயே இழப்பீடு அறிவிக்கப்பட்டது. காயம் அடைந்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மருத்துவ சிகிச்சை பற்றியும் முதலமைச்சர் கூறி இருந்தார். நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்" என்றார்.





















