`நவீனப் பெண்கள் சிங்கிளாக இருக்கவே விரும்புகின்றனர்!’ - அமைச்சர் சர்ச்சைக் கருத்து.. பின்னணி என்ன?
கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் நவீன இந்தியப் பெண்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து காரணமாகக் கடுமையாக விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார்.
கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் நவீன இந்தியப் பெண்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து காரணமாகக் கடுமையாக விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார். கடந்த அக்டோபர் 10 அன்று, உலக மன நல தினம் அனுசரிக்கப்பட்டது. அதுகுறித்து தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் ஆய்வுகளுக்கான நிறுவனத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் அவர் அவ்வாறு பேசியுள்ளார்.
`இன்று இதனைச் சொல்வதற்கு வருத்தம் கொள்கிறேன். இந்தியாவில் தற்போதைய பெரும்பாலான நவீனப் பெண்கள் சிங்கிளாக இருக்கவே விரும்புகின்றனர். திருமணம் செய்துகொண்டாலும், குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள விரும்புவதில்லை. வாடகைத் தாய்களை நாடுகின்றனர். நமது சிந்தனைப் போக்கில் ஏற்படும் இப்படியான மாற்றங்கள் நல்லதல்ல’ என்று கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் கூறியுள்ளார்.
மேற்கத்திய சமூகத்தின் தாக்கத்தால், இளைஞர்கள் தங்கள் பெற்றோருடன் வாழ மறுப்பதாகவும் அமைச்சர் கே.சுதாகர் கூறியுள்ளார். `துரதிருஷ்டவசமாக நாம் இன்று மேற்கத்திய வழிமுறைகளைப் பின்பற்றுகிறோம். நமது பெற்றோருடன் வாழ விரும்புவதில்லை’ என்றும் அவர் கூறியுள்ளார். ஆணாதிக்கத்தைப் போற்றும் சர்ச்சைக்குரிய கருத்துகளை இந்திய அரசியல்வாதிகள் முன்மொழிவது இது முதல் முறையல்ல.
உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளுள் இரண்டாவதாக இருக்கும் இந்தியாவில் தாய்மை என்பது சமூகத்தாலும், இலக்கியம், சினிமா முதலான கலைகளிலும் போற்றப்பட்டாலும், பெண்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதில் தொடர்ந்து விருப்பமின்மையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பெண்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்வது தொடர்பாக ஆய்வாளர்கள் நம்ரதா மண்டல், சந்தர் சேகர், தேவாரம் நாகதேவ ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில், பெண் கல்விக்கும், குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் இடையில் எதிர்மறையான உறவு இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். மேலும், கல்வியின் காரணமாகப் பெண்களின் திருமண வயதில் மாற்றம் ஏற்பட்டிருப்பது, பணியில் பங்கேற்பது, கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவது முதலானவை அதிகரித்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு, இந்தியப் பதிவாளர் ஜெனரல் அலுவலகம் நடத்திய ஆய்வில் இந்திய அளவில் குழந்தைகள் பிறக்கும் விகிதம் வரலாறு காணாத அளவில் சுமார் 2.2 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடப்பட்டிருந்தது. இது பெரும்பாலும் தென் மாநிலங்களில் பரவலாகக் காணப்பட்டுள்ளது.
2017 Global Burden of Disease Study என்ற ஆய்வின்படி, 1950ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் குழந்தை பிறக்கும் விகிதம் சுமார் பாதியாக சரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் வளர்ந்த நாடுகளில் சுமார் ஐந்தில் ஒரு பெண் முதல் மூன்றில் ஒரு பெண் வரை, கருவுற்ற பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்ற மனநிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
கல்வி, பொருளாதார சுதந்திரம், சூழலியல் காரணங்கள் முதலானவை பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் முடிவைத் தீர்மானிப்பதாக இருந்தாலும், அதன்மீதான சமூக அழுத்தம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இதன் பின்னணியில், பெண்களின் மனநலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவில் மனநல மருத்துவத்தின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படுத்துவதின் அவசியம் குறித்து பேசப்பட்டு வருகிறது. பிரிட்டன், ஜப்பான் ஆகிய நாடுகளில் தனிமைக்கான அமைச்சர் என்ற பொறுப்பும், ஆஸ்திரேலியாவின் மன நல அமைச்சர் பொறுப்பும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மத்தியப் பிரதேசத்தில் மகிழ்ச்சிக்கான அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இந்தியாவில் மன நலத்திற்கான தனி அமைச்சரவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் ஆய்வுகளுக்கான நிறுவனம் டிஜிட்டல் வழிமுறைகளின் மூலம் மக்களுக்கு மன நல ஆலோசனை வழங்கி வருவதோடு, தொலைபேசி வழியாகவும் வழங்குகிறது.