Karnataka Election Result: சித்தராமையாவா..? டி.கே.சிவக்குமாரா..? முதலமைச்சர் பதவிக்கு காங்கிரசின் ப்ளான் இதுதான்..!
தேர்தலில் வெற்றிபெற அரும்பாடுபட்ட காங்கிரஸ் மாநில தலைவர் டி. கே. சிவக்குமார் மற்றும் சித்தராமையா இடையே முதலமைச்சர் பதவியை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாஜக அரசுக்கு நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு காங்கிரஸ் கட்சி மரண அடி கொடுத்துள்ளது. இதனால், அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். கடந்த மே 10ஆம் தேதி, கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.
அடுத்த முதலமைச்சர் யார்?
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், 132 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில், எந்த கட்சியும் பெற்றிராத மிக பெரிய வெற்றியை காங்கிரஸ் பதிவு செய்திருந்தாலும் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
அடுத்த முதலமைச்சர் யார் என்ற விவகாரத்தில் உட்கட்சியிலே கடுமையான மோதல் நிலவி வருகிறது. குறிப்பாக தேர்தலில் வெற்றிபெற அரும்பாடுபட்ட காங்கிரஸ் மாநில தலைவர் டி. கே. சிவக்குமார் மற்றும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
சித்தராமையா:
75 வயதான சித்தராமையா, 1983ஆம் ஆண்டு, சாமுண்டேஸ்வரி தொகுதியில் முதல் முறையாக வெற்றி பெற்றார். பின்னர், மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவிகளை வகித்தார். 2013ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றியை தொடர்ந்து, முதலமைச்சரானார்.
இந்தி எதிர்ப்பு, மாநில சுயாட்சி, கர்நாடகத்திற்கு தனி கொடி என பாஜகவுக்கு எதிராக கடுமையாக அரசியல் செய்தவர். கடந்த 2018 சட்டப்பேரவை தேர்தலில், பாதாமி, சாமுண்டேஸ்வரி ஆகிய இரண்டு தொகுதிகளில் சித்தராமையா போட்டியிட்டார். அதில், அவர் பாதாமியில் மட்டுமே வெற்றி பெற்றார். இந்த தேர்தலில், தனது பாரம்பரியமான வருணா தொகுதியில் களம் கண்டு வெற்றிபெற்றுள்ளார்.
டி. கே. சிவகுமார்:
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கட்சியின் விசுவாசியாகவும், காந்தி குடும்பம் விசுவாசிகளுக்கு ஆதரவானவர் என்றும் அறியப்படுகிறார். அவர் முதலமைச்சராக பதவி உயர இதுவே சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது. கனகபுரா தொகுதியில் இருந்து 8 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த இவர், காங்கிரஸ் கட்சியினரிடையே பலமான ஆதரவை பெற்றுள்ளார்.
அவர் மாநிலத்தின் பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவராக பார்க்கப்படும் சூழலில், கட்சிக்கான நிதி திரட்டுவதிலும் இவரே முக்கிய பங்காற்றுகிறார். சிவக்குமார் மீது சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறையால் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பணமோசடி மற்றும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் சுமார் 104 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் ஃபார்முலா:
அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் தொடர் குழுப்பம் நீடித்து வரும் நிலையில், சித்தராமையாவை முதல் இரண்டரை ஆண்டுகளுக்கும் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு டி.கே.சிவக்குமாரை முதலமைச்சராக்கவும் காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுதான், தன்னுடைய கடைசி தேர்தல் என சித்தராமையா அறிவித்துவிட்டதால் அவருக்கு முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
அதேபோல, பொதுத் தேர்தலின்போது, கர்நாடகம் மட்டும் இன்றி தென்னிந்தியா முழுவதும் தேர்தல் வியூகம் அமைக்க டி.கே.சிவக்குமார், காங்கிரஸ் கட்சிக்கு அதிகம் தேவைப்படுவதால், தேர்தலுக்கு பிறகு, இரண்டரை ஆண்டுகளுக்கு அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.