‛பேருந்தில் ஹெட் போன் கட்டாயம்: வெளியே சவுண்ட் கேட்டால் இறக்கிவிடலாம்’ -உயர்நீதிமன்றம் அதிரடி!
பேருந்தில் பயணம் செய்யும் போது மொபைல் போன் ஸ்பீக்கரில் அதிக சத்தம் வைத்து பாட்டு, வீடியோக்கள் பார்ப்பவர்களை நடத்துனர்கள் பேருந்தை விட்டு இறக்கிவிடலாம் என உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
மொபைல் போன் பயன்பாடு கடுமையாக அதிகரித்திருப்பதால் தற்போதெல்லாம் அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட் போன்கள் தவழுகின்றன. வைத்த கண் வாங்காமல் பல மணி நேரங்களாக மொபைலை மெய் மறந்து பார்ப்பவர்கள் இன்று ஏராளம். மொபைல் போன் பயன்பாட்டுக்கு பலரும் அடிமைகளாகவும் மாறிவிட்ட நிலையில், அது தவிர்க்க முடியாத ஒன்றாக மக்கள் மத்தியில் மாறி உள்ளது. தற்போது ஆன்லைன் வகுப்புகள் என்ற ஒன்று நம் நாட்டில் பிரபாலாமாகிவிட்டதால், மாணவர்களின் கைகளிலும் ஸ்மார்ட் போன் புழக்கம் அதிகரித்து விட்டது. வேலை நேரத்திலும் ஸ்மார்ட் போன், சமையலின் போதும் மொபைல் யூட்யூப், குளிக்கும்போதும் ஸ்மார்ட் போன் என நம் மொபைல் பயன்பாட்டுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. பேருந்து, ரயிலில் பயணிப்பவர்கள் முன்பெல்லாம் புத்தகம் படிப்பார்கள் இல்லையென்றால் சக பயணிகளிடம் அரசியல், சினிமா என பல கதைகளையும் பேசி பேச்சுக் கொடுத்தவாறே பயணம் செய்வார்கள். ஆனால் தற்போதெல்லாம் பக்கத்தில் இருப்பவர்களுடன் பேசுவதே, அபூர்வமாக ஆகியுள்ளது.
மொபைலில் பாட்டுக்கள் கேட்டவாறும், படங்கள் பார்த்தவாறும், யுடியூபில் ஏதேனும் ஒரு வீடியோவை பார்த்தவாறும் பயணம் செய்பவர்கள் தான் இன்று அனேகம் பேர். ஆனால் பக்கத்தில் இருப்பவர்கள் சில நேரம் இதனால் எரிச்சல் அடைகின்றனர். இதுபோன்ற தொந்தரவுக்கு ஆளான நபர் ஒருவர் பேருந்தில் பயணிக்கும் போது, சத்தமாக பாட்டுக் கேட்கவும், வீடியோ பார்க்கவும் தடை விதிக்கக் கோரி, கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில், ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு, கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், பேருந்தில் பயணம் செய்யும் போது, மொபைல் போன் ஸ்பீக்கரில், அதிக சத்தம் வைத்து பாட்டு, வீடியோக்கள் பார்ப்பவர்களை, சக பயணிகளுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என பேருந்து நடத்துனர், ஓட்டுனர் அறிவுறுத்த வேண்டும். இந்த அறிவுறுத்தலை மீறும் பயணியை பேருந்து ஊழியர்கள் தாராளமாக பேருந்தை விட்டு இறக்கிவிடலாம் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.
ஏற்கனவே பணியிலிருக்கும் போது ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தங்களது உரிமத்தை, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆய்வின் பொழுது காண்பிக்க உடன் வைத்திருக்க வேண்டும் என்றும், பெயர், பணி எண் உடன் கூடிய ஐடி கார்டை அணிந்திருக்க வேண்டும் என்றும் ஓட்டுநர்கள் பேருந்து இயக்கும் போது கட்டாயமாக செல்போன் பயன்படுத்தக்கூடாது என்றும், அதை நடத்துநரிடன் கொடுத்து வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் இப்போது பயணிப்பபவர்களும் கவனத்துடன் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் செயல்பட வேண்டியுள்ளது. தற்போது செல்போன் பயன்படுத்தும் பெரும்பாலானோரிடம் ஏர்ஃபோன் உள்ளது என்பதால், அதனை பயன்படுத்தி மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் உல்லாசமாக பயணம் செய்யலாம். அதுவும் காதை அதிகம் பாதிக்கும் என்பதால், குறைந்த அளவு சத்தத்தை பயன்படுத்துவது சிறந்தது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.