Kangana Ranaut Twitter Suspended: கங்கனா டுவிட்டர் கணக்கு முடக்கம்.. காரணம் என்ன?
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் கணக்கு தற்போது முடக்கப்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் டுவிட்டர் மூலம் பல்வேறு கருத்துக்களை அடிக்கடி தெரிவித்து வருபவர். குறிப்பாக மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா அரசு எதிரான கருத்துக்கள் அவருக்கு பல்வேறு எதிர்ப்பு நிலையை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவான அவரது நிலைப்பாடு ஒரு சிலரின் கடுமையான விமர்சனத்திற்கும் ஆளாகி வந்தது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த மேற்கு வங்க தேர்தல் தொடர்பாக கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் பல பதிவுகளை செய்திருந்தார். மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான அரசு பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சிய அமைக்க உள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஒரு சில இடங்களில் சிறிய அளவில் வன்முறை ஏற்பட்டது. இது தொடர்பாக கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் அங்கு ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்றும் சில கருத்துகளை தெரிவித்து வந்தார்.
மேலும் கொரோனா தொற்று பாதிப்பால் ஆக்சிஜன் இல்லாமல் தவித்து வரும் சூழலில் இதுகுறித்தும் கங்கனா ரனாவத் மரங்கள் நடுங்கள் என்று சம்பந்தம் இல்லாமல் ட்விட் செய்து வந்தார். மேலும் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியா மோசமான நிலையை சந்திப்பதற்கு காரணம் இந்தியாவின் மக்கள் தொகை தான் காரணம் எனப் பல ட்வீட்களை செய்து வந்தார். இதனால் ட்விட்டரில் பலரும் இவருக்கு எதிராக கருத்துகளை பதிவு செய்து வந்தனர்.
இந்தச் சூழலில் இன்று கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இது குறித்து ட்விட்டர் செய்தி தொடர்பாளர், "எங்கள் தளத்தில் உள்ள விதிமுறைகளை மீறுவோர்கள் மீது நாங்கள் எப்போதும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது முடக்கப்பட்டுள்ள கணக்கும் எங்களது தளத்தின் விதிமுறைகளை மீறியுள்ளது. குறிப்பாக இந்த கணக்கு தேவையில்லாத வெறுக்கதக்க தகவல்களை ட்விட்டரில் பகிர்ந்து வந்துள்ளது. அதன் காரணமாகவே இக்கணக்கு முடக்கப்பட்டுள்ளது. எங்கள் தளத்தின் விதிமுறைகளை யார் மீறினாலும் அவர்கள் மீது நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம் " எனத் தெரிவித்துள்ளார்.
கங்கனாவின் ட்விட்டர் கணக்கு மீது ட்விட்டர் நடவடிக்கை எடுப்பது இது முதல் தடவை அல்ல. ஏற்கெனவே கடந்த ஆண்டு தாண்டவ் என்ற வேப்சீரிஸ் தொடர்பாக அவர் பதிவிட்ட கருத்துகளுக்கு பின்னர் இவருடைய ட்விட்டர் கணக்கில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பின்னரும் இவர் தொடர்ந்து அறுவறுக்கதக்க கருத்துகளை பதிவிட்டு வந்ததால் தற்போது அவரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
கங்கனா ரனாவத் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் அவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான தலைவி படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இவர் ஐநாவின் சுற்றுச்சூழல் தொடர்பான நல்லெண தூதராகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.