பாஜகவை நோக்கி நகரும் முக்கிய கட்சி... மாறும் கூட்டணி கணக்கு... எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு பின்னடைவா..?
கர்நாடகாவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்துள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம், பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு, 2019ஆம் ஆண்டு என தொடர்ந்து இரண்டு மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக 9 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகிறது. பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றி பா.ஜ.க. அசுர பலத்தில் உள்ளது. இச்சூழலில், இன்னும் 10 மாதங்களில் அடுத்த மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தலுக்கு முன்னதாகவே அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்தாண்டு பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுகிறது. அதில், மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பாஜக அல்லது பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி அமைத்திருந்தாலும், கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் மிக பெரிய வெற்றியை பதிவு செய்தது.
பாஜகவை நோக்கி நகரும் தேவகவுடா:
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றி எதிர்க்கட்சிகளுக்கு ஊக்கம் தந்தது. இதை தொடர்ந்து, பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த சூழலில், எதிர்க்கட்சிகளின் முயற்சிகளில் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக பாஜகவை நோக்கி எதிர்க்கட்சி ஒன்று நகர்வதற்கான சமிக்ஞை தெரிகிறது.
சமீபத்தில், கர்நாடகாவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்துள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம், பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அடுத்தாண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில், பாஜக கூட்டணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது. அதேபோல, கடந்த மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், கிங் மேக்கர் ஆகலாம் என நினைத்து கொண்டிருந்த அந்த கட்சிக்கு ஏமாற்றமே பரிசாக கிடைத்தது. 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றிருந்தது.
தோல்வி முகத்தில் இருக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளம் புது வியூகம்:
தொடர் தோல்வி முகத்தில் இருக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியை வீழ்த்த பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா, அவரின் மகனும் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைப்பது ஒன்றும் புதிதல்ல. கர்நாடகாவில் கடந்த 2006 ஆம் ஆண்டே, பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைத்தது. குமாரசாமி முதலமைச்சராகவும், பாஜகவின் எடியூரப்பா துணை முதலமைச்சராவும் 20 மாதங்கள் பதவி வகித்தனர். ஆனால், கூட்டணி பார்முலாவின்படி, முதலமைச்சர் பதவியை எடியூரப்பாவுக்கு வழங்காததால் அந்த ஆட்சி கவிழ்ந்தது.
தற்போது மீண்டும் கூட்டணி அமைப்பதற்கான சிக்னலை மதச்சார்பற்ற ஜனதா தளம் வெளிப்படுத்தி வருகிறது. ஒடிசா ரயில் விபத்து விவகாரத்தில், ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் அனைத்தும் கோரிய நிலையில், அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார் தேவகவுடா.
அதேபோல, எதிர்க்கட்சிகள் புறக்கணித்த புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் தேவகவுடா கலந்து கொண்டார். கடந்த மாதம், தேவகவுடா பிறந்தநாளன்று பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்து மழை பொழிந்தது பல்வேறு விதமான ஊகங்களுக்கு வழி வகுத்தது.