Jammu Kashmir Tourist: 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குவிந்த சுற்றுலா பயணிகள்! ஸ்தம்பிக்கும் ஜம்மு காஷ்மீர்
ஜம்மு காஷ்மீரில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீரின் பிரபலமான சுற்றுலா தலமான தால் ஏரியின் ஷிகாரா கூட்டமைப்பின் தலைவர் இது குறித்து கூறுகையில், இந்த ஆண்டு காஷ்மீருக்கு கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். அடுத்த ஆண்டு நாங்கள் இன்னும் அதிகமான சுற்றுலா பயணிகள் வரலாம் என எதிர்பார்க்கிறோம். காஷ்மீரில் சுற்றுலா சார்ந்த கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். குறிப்பாக தால் ஏரி படகு வீடுகள் மேம்படுத்தப்பட வேண்டும். இதில் அரசு எங்களுக்கு உதவ வேண்டும் என்று கோரினார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370-வது சட்டப்பிரிவில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதன்மூலம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபோது, அந்த மாநிலம் 2 ஆகப் பிரிக்கப்பட்டது. இதன்படி ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையுடன்கூ டிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் உருவானது.
காஷ்மீரில் சுற்றுலா:
ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா என்பது ஜம்மு-காஷ்மீர் காஷ்மீர் பள்ளத்தாக்கு, செனாப் பள்ளத்தாக்கு, சிந்து பள்ளத்தாக்கு மற்றும் லித்தர் பள்ளத்தாக்கு போன்ற பல பள்ளத்தாக்குகளை கொண்டுள்ளது. ஸ்ரீநகர், முகலாயத் தோட்டங்கள், குல்மார்க், பகல்காம், பத்னிதோப் மற்றும் ஜம்மு போன்றவை ஜம்மு-காஷ்மீரில் சில முக்கிய சுற்றுலா தலங்கள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான இந்து யாத்ரீகர்கள் வைஷ்ணவி தேவி கோயிலுக்கும் அமர்நாத்தின் பனிக்கட்டி இலிங்கத்தைத் தரிசிக்கவும் வருகை தருகின்றனர். இது மாநிலத்தின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் பள்ளத்தாக்கு இந்தியாவின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இந்தியாவின் மிகவும் பிரபலமான மலை வாழிடங்களில் ஒன்றான குல்மார்க், உலகின் மிக உயர்ந்த பசுமையான குழிப்பந்தாட்ட மைதானமாகவும் உள்ளது. தீவிரவாத அச்சத்தால் கடந்த முப்பது ஆண்டுகளில் சுற்றுலா மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது.
Jammu & Kashmir has received the most number of tourists this year in 75 yrs
— ANI (@ANI) October 7, 2022
We expect to get more no. of tourists next year. We're focusing on tourism infrastructure including upgrading houseboats. The govt should also help us: President, Shikara Association Dal Lake, Srinagar pic.twitter.com/Y3UjSECAmS
சுற்றுலாவை நம்பியிருக்கும் வணிகம் தொடர்புடைய மக்கள் கடும் சவால்களை எதிர்கொள்கின்றனர். மேலும் பிராந்தியத்தில் முன்னெப்போதுமில்லாத சூழ்நிலை காரணமாக எப்போதும் பெரும் இழப்பை சந்திக்கின்றனர். ஜம்மு-காஷ்மீர் அதன் அழகிய அழகு, மலர் தோட்டங்கள், ஆப்பிள் பண்ணைகள் மற்றும் பலவற்றிற்கும் பிரபலமானது. இது அதன் தனித்துவமான கைவினைப்பொருட்கள் மற்றும் உலகப் புகழ்பெற்ற காஷ்மீரி சால்வைகளுக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.
ஜம்மு-காஷ்மீரை சாலை வழியாகவும், விமானம் மூலம் அடையலாம். தேசிய நெடுஞ்சாலை எண் 1ஏவில் காசிகுண்டிற்கு அருகிலுள்ள பனிஹால் சாலை சுரங்கப்பாதை வழியாகவும், சிந்தான் கணவாய் மற்றும் கிஷ்துவார் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை 1பி வழியாகவும் இது இந்தியாவின் பிற பகுதிகளுக்கு அணுகலைக் கொண்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் ஜம்மு விமான நிலையம் மற்றும் ஸ்ரீநகரில் உள்ள ஷேக் உல்-ஆலம் சர்வதேச விமான நிலையம் என இரு பயணிகள் விமான நிலையங்கள் உள்ளன. இவை, புது தில்லி, மும்பை, பெங்களூர் போன்ற இடங்களிலிருந்து நேரடி விமானச் சேவைகளைப் பெறுகிறது. ஜம்மு-காஷ்மீரில் 119 கிமீ (74 மைல்) நீளமுள்ள நவீன இரயில் பாதை அக்டோபர் 2009 இல் தொடங்கி வைக்கப்பட்டது. இது பள்ளத்தாக்கின் மேற்கு பகுதியில் உள்ள பாரமுல்லாவை ஸ்ரீநகர் மற்றும் காசிகுண்டுடன் இணைக்கிறது.
இந்நிலையில் 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது சுற்றுலா பயணிகள் அதிகரித்துள்ளதற்கு தீவிரவாத செயல்கள் ஒடுக்கப்பட்டதே காரணம் எனக் கூறப்படுகிறது.