Jammu Kashmir : பனிச்சரிவில் சிக்கி மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழப்பு - ஜம்மு காஷ்மீரில் சோகம்..!
ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் நேற்று பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.
Terrible news. Three Indian Army soldiers of 56 RR killed in the line of duty in Machhil area of Kupwara in North Kashmir when they came under an avalanche around 12 noon. Mortal remains have been retrieved. Rest in Peace Souvik Hajra, Mukesh Kumar and Gaikwad Manoj Laxman Rao.
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) November 18, 2022
இந்த தகவலை காவல்துறை உறுதி செய்துள்ளது. குப்வாரா மாவட்டத்தில் இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
3 பேர் உயிரிழப்பு :
இதுகுறித்து குப்வாரா காவல்துறை தரப்பு கூறுகையில், "மச்சில் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராணுவத்தின் 55 ராஷ்டிரிய ரைபிள் பிரிவில் பணியில் இருந்த மூன்று ராணுவ வீரர்கள் இதில் மரணம் அடைந்தனர். அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது" என்றார்.
சமீபத்தில், கிஷ்த்வாரில் மின் திட்ட சுரங்கப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். நிலச்சரிவு ஏற்பட்டவுடன் சுரங்கப்பாதைக்கு விரைந்த மீட்புக்குழுவை சேர்ந்த 6 பேரும் அங்கு சிக்கினர். முன்னதாக, நான்கு பேர் நிலச்சரிவில் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதில், மூவர் மீட்கப்பட்டனர். ஒருவர் உயிரிழந்தார். மேலும், மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு சென்று, மின் விளக்குகளின் உதவியோடு சிக்கியவர்களைத் தேடி மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
கல்குவாரி விபத்து :
அதேபோல, ஹரியானா மாநிலம் பிவானி பகுதியில் அமைந்துள்ள கல்குவாரி ஒன்றில் மிகவும் மோசமான நிலச்சரிவு எற்பட்டது. இதனையடுத்து, மீட்பு பணிகளை அம்மாநில அரசு துரிதப்படுத்தியது. ஏராளமானோர் இந்த நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியிருந்தது.
காலநிலை மாற்றத்தின் காரணமாக தீவிரமான வானிலை சூழல்கள் ஏற்படுகிறது. கால நிலை மாற்றத்தின் தீவிரத்தை குறைத்த ஐ.நா. பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தவும் உலக நாடுகள் அனைத்தையும் ஒன்றாக இணைக்கும் முதல் ஒப்பந்தமாக பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இருப்பினும், இந்த ஒப்பந்தத்தின் பல்வேறு அம்சங்கள் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. குறிப்பாக, பருவநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளை தவிர்க்க தொழிற்புரட்சி காலத்திற்கு முன்பு இருந்த சராசரி வெப்பநிலையை விட 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அளவுக்கு புவி வெப்பமயமாதல் அதிகரிக்கக் கூடாது என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.
பருவநிலை :
இதற்காக, நிலக்கரி, பெட்ரோல் உள்ளிட்டவற்றின் பயன்பாட்டை குறைத்து இயற்கையை பாதுகாக்க வேண்டும். ஆனால், இதனை நிறைவேற்ற முடியாமல் இருக்கிறது. காலநிலை மாற்றத்தின் தொடர்ச்சியாகத்தான், இந்தியாவில் தீவிரமான வெப்ப சலனமும் அதிக அளவில் மழையும் பொழிகிறது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு வெப்பமும் பதிவாகியுள்ளது. உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் நிலச்சரிவு பனிச்சரிவும் ஏற்படுகிறது.