ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படுமா? டெல்லியில் முக்கிய மீட்டிங்!
ஜம்மு காஷ்மீர் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றதை தொடர்ந்து முதல்முறையாக டெல்லிக்கு சென்ற உமர் அப்துல்லா, பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் புதிய முதலமைச்சர் உமர் அப்துல்லா, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது, ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் அந்தஸ்து வழங்க வேண்டும் என முதலமைச்சர் உமர் அப்துல்லா கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது.
டெல்லியில் முக்கிய சந்திப்பு:
கடந்த 2019 ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு , ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. மொத்தம் 95 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில், 90 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் தேசிய காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி 48 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஐந்து உறுப்பினர்களை துணைநிலை ஆளுநர் பரிந்துரைப்பார்.
பெரும்பான்மை இடங்களில் தேசிய மாநாடு – காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், முதலமைச்சராக தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஓமர் அப்துல்லா சமீபத்தில் பதவியேற்றுக் கொண்டார். துணை முதலமைச்சர் பதவி சுரிந்தர் சவுத்ரிக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படுமா?
ஜம்மு காஷ்மீர் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றதை தொடர்ந்து முதல்முறையாக டெல்லிக்கு சென்ற உமர் அப்துல்லா, பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். முன்னதாக, நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
உமர் அப்துல்லா - அமித் ஷா சந்திப்பின்போது, ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீரின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவும் ஒப்புதல் அளித்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. அதுமட்டும் இன்றி, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தின் மூலம் அந்த மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
இதையும் படிக்க: ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

