JK Terror Attack: ஜம்மு-காஷ்மீரில் குண்டு வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் தீவிரவாத தாக்குதல்.. ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழப்பு
ஜம்மு - காஷ்மீரில் தீவிவரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
ஜம்மு - காஷ்மீரில் தீவிவரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய நபர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
ராணுவ வாகனம் மீது தாக்குதல்:
இந்தியா-பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள பூஞ்ச் மாவட்டத்தில் ஏராளமான ராணுவ முகாம்கள் அமைந்துள்ளன. அங்கிருந்து ராணுவ வீரர்கள் வாகனங்களில் தினசரி எல்லைப்பணிக்கு சென்று வருவது வழக்கம். அந்த வகையில் ராணுவத்திற்கு சொந்தமான வாகனம் ஒன்று ரஜோரி-பூஞ்ச் தேசிய நெடுஞ்சாலையில் பிம்பர் காலி பகுதியில் இருந்து சாங்கியோட் நோக்கி சென்றுகொண்டிருந்தது. அபோது அப்பகுதியில் மறைந்துகொண்டிருந்த தீவிரவாதிகள், ராணுவ வாகனத்தின் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதோடு கையெறி குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் வாகனம் தீப்பிடித்து எரிந்ததும், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர்.
5 வீரர்கள் வீர மரணம்:
எதிர்பாராத நேரத்தில் திடீரென நடத்தப்பட்ட தாக்குதலில், ராணுவ வாகனத்தில் இருந்த ராஷ்ட்ரிய ரைஃபிள் பிரிவை சேர்ந்த 5 வீரர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தேடுதல் பணி தீவிரம்:
தாக்குதல் தொடர்பான தகவல் அறிந்ததும் ராஷ்ட்ரிய ரைபிள் படையை சேர்ந்த ஏராளமானோர் அங்கு குவிக்கப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர்களை தேடுவதற்கு ஏதுவாக அந்த பகுதியை சுற்றி வளைத்த ராணுவம், அப்பகுதியில் போக்குவரத்து மற்றும் மக்களின் நடமாட்டத்தையும் ரத்து செய்தது.
ராணுவம் உறுதி
முன்னதாக தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. அத்துடன் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஒரு வீரர் ராஜ்புரியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கனமழை மற்றும் மோசமான வானிலையை பயன்படுத்தி தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் வாகனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தானாகவே தீப்பிடித்து எரிந்ததாக சில தகவல்கள் வெளியாகின. ஆனால், சிறிது நேரம் கழித்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் தான் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக ராணுவம் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டது. தீவிரவாதிகளின் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் காஷ்மீரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
சிக்கிம் விபத்து:
அண்மையில், சிக்கிம் மாநிலத்தில் நடந்த சாலை விபத்தில் ராணுவ வீரர்கள் 16 பேர் உயிரிழந்தனர். வடக்கு சிக்கிமில் உள்ள ஜெமாவில் ராணுவ டிரக் சாலை விபத்தில் சிக்கி 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சாலை வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம், பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதேபோன்று, கடந்த 2021ஆம் ஆண்டில், ராஜஸ்தானின் கங்காநகர் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் பயணம் செய்த ராணுவ வாகனம் கவிழ்ந்து தீப்பிடித்ததில் மூன்று வீரர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.