Aditya L1: சூரிய வெடிப்பை க்ளிக் செய்த ஆதித்யா எல் 1 விண்கலம்.. இஸ்ரோ வெளியிட்ட புகைப்படம்
சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் சூரிய வெடிப்பு புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.
சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ தரப்பில் அனுப்பப்பட்ட ஆதித்தயா எல் 1 விண்கலம் மே10 மற்றும் 12 ஆம் தேதிகளில் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை புகைப்படமாக எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.
ISRO Captures the Signatures of the Recent Solar Eruptive Events from Earth, Sun-Earth L1 Point, and the Moonhttps://t.co/bZBCW9flT1 pic.twitter.com/SaqGu5LjOV
— ISRO (@isro) May 14, 2024
சூரியனை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சார்பில் ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்தாண்டும் செப்டம்பர் 1 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. பூமிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள லெக்ராஞ்சியன் புள்ளி 1-இல் சூரியனை நோக்கி இந்த விண்கலம் தனது பயணத்தை தொடங்கியது.
புவியின் சுற்றுவட்டப்பாதையை அடைந்த ஆதித்யா எல்-1 விண்கலம், படிப்படியாக அடுத்தடுத்து இலக்கை நோக்கி உந்தி தள்ளப்பட்டன. செப்டம்பர் 30 ஆம் தேதி பூமியில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் 9.2 லட்சம் கிலோ மீட்டர் தொலைவை வெற்றிகரமாக கடந்தது. பூமியின் ஈர்ப்பு விசை உள்ள பகுதியை விட்டு வெளியேறிய ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியன் குறித்த ஆய்வுக்காக லெக்ராஞ்சியன் எல்-1 புள்ளியை நோக்கி பயணிக்க தொடங்கியது. இதையடுத்து, பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லெக்ராஞ்சியன் எல்1 புள்ளியை ஆதித்யா எல்1 விண்கலம் எட்டியது.
ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனின் மேல் வளிமண்டலம் மற்றும் வெளிப்புற அடுக்குகளை ஆராய்ச்சி செய்ய உள்ளது. இதற்காக அந்த செயற்கைகோளில், சூரியனை பற்றி ஆய்வு செய்ய விஇஎல்சி (Visible Emission Line Coronagraph) என்ற தொலைநோக்கி, எஸ்யுஐடி ( Solar Ultraviolet Imaging Telescope) என்ற தொலைநோக்கி, ஏ ஸ்பெக்ஸ் (Aditya Solar wind Particle Experiment) என்ற சூரிய காற்றின் தன்மைகளை ஆய்வு செய்யும் கருவி, சூரிய சக்தியை ஆராயும் பிஏபிஏ ( Plasma Analyser Package for Aditya ), சூரியனின் எக்ஸ்ரே கதிர்கள் மற்றும் வெப்பத்தை கண்காணிக்கும் சோலெக்ஸ் ( Solar Low Energy X-ray Spectrometer) உள்ளிட்ட முக்கிய கருவிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், ஆதித்யா எல் 1 விணகலம் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த சூரிய வெடிப்பை புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது. 2003 ஆம் ஆண்டுக்கு பின் ஏற்படும் மிகப்பெரிய சூரிய வெடிப்பு இதுவே ஆகும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.