International Girl Child Day: சர்வதேச பெண் குழந்தைகள் தினம்: மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் என்னென்ன?
சர்வதேச பெண் குழந்தைகள் தினம் உலகம் முழுவதும் அக்டோபர் 11ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
சர்வதேச பெண் குழந்தைகள் தினம் உலகம் முழுவதும் அக்டோபர் 11ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத் திட்டங்களைக் கொண்டு வந்து, செயல்படுத்தி வருகின்றன.
பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்காகக் கொண்டுவந்துள்ள நலத்திட்டங்கள் என்னென்ன? பார்க்கலாம்.
சுகன்யா சம்ரிதி யோஜனா (செல்வ மகள் சேமிப்பு திட்டம்)
சுகன்யா சம்ரிதி யோஜனா என்பது பெண் குழந்தைக்கான சிறு சேமிப்புத் திட்டமாகும். இது தமிழில் செல்வ மகள் சேமிப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சேமிப்புத் திட்டத்தின் கீழ் பெண் குழந்தையின் பெற்றோர்கள் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி வந்தால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது குறிப்பிட்டதொகை அவர்களுக்கு வழங்கப்படும். இதுதவிர்த்து, ஆண்டுக்கு சுமார் 7% வட்டி (மாறுதலுக்கு உட்பட்டது) வழங்கப்படுகிறது.
பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது சட்டபூர்வமான பாதுகாவலர் குழந்தையின் சார்பாக தபால் அலுவலகம் அல்லது இந்த திட்டம் உள்ள வங்கிகளில் கணக்கைத் தொடங்கலாம். இந்தத் திட்டத்தைப் பெண் குழந்தைகளின் பெற்றோர் எதிர்கால சேமிப்பாகவும், வருமானம் ஈட்டும் முதலீடாகவும் கருதுகின்றனர்.
என்ன தகுதி?
* ஒரே ஒரு பெண் குழந்தை உள்ள பெற்றோருக்கு மட்டுமே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
* செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் பதிவு செய்யும் பெண் குழந்தைக்கு 10 வயது நிரம்பியிருக்கக் கூடாது.
* இந்த திட்டத்தின்கீழ் செலுத்தும் தொகைக்கு வரி விலக்கு உண்டு.
* ஒருவர் மாதம் ரூ.2500 இந்த திட்டத்தில் சேமித்து வந்தால், முதலீடு முதிர்வடையும் போது சுமார் ரூ.12,00,000 வரை கிடைக்கும்.
பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ் (பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்)
பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்னும் பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ் (Beti Bachao, Beti Padhao) திட்டம், மத்திய அரசின் முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றாகும். முதல்கட்டமாக ரூ.100 கோடி நிதியுடன் இத்திட்டம் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் 100 மாவட்டங்களில் குழந்தை பாலின விகிதம் குறைவாக இடங்களில் செயல்படுத்தப்பட்டது.
எதற்கு இந்தத் திட்டம்?
மக்கள் தொகை கணக்கெடுப்புகளின்படி, இந்தியாவில் பாலின விகிதம் ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. 2001-ல் 1,000 ஆண்களுக்கு 927 பெண்கள் என இருந்த எண்ணிக்கை 2011-ல் ஒவ்வொரு 1,000 ஆண்களுக்கும் 919 பெண்களாகக் குறைந்தது. இதையடுத்து 2014-ல் சர்வதேச பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பெண் சிசுக்கொலைகளை ஒழிக்க அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து 2015-ல் பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. இது குறைந்து வரும் குழந்தை பாலின விகித பிம்பத்தின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காகத் தொடங்கப்பட்டது.
பாலிகா சம்ரிதி யோஜனா (Balika Samriddhi Yojana )
இது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள இளம் பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டது. பள்ளிப்படிப்பில் பெண்களை ஈடுபடுத்துவது, குழந்தை திருமணத்தை தடுத்து திருமண வயதை நிர்ணயிப்பது போன்றவையே இந்த திட்டத்தின் குறிக்கோள்.
பெண் குழந்தை பிறந்த பிறகு 500 ரூபாயும், அதன் பிறகு 10ஆம் வகுப்பு படிக்கும் வரையில் ஆன்டுக்கு 300 முதல் 1000 ரூபாய் வரையிலான நிதியினை இத்திட்டம் வழங்குகிறது. 18 வயதிற்குப் பிறகு திருமண அல்லது கல்வி உதவித்தொகையினையும் இதன் மூலம் பெற முடியும்.
மாநில அரசின் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்
தமிழக அரசால் கடந்த 1992-ம் ஆண்டிலேயே முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி, குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50 ஆயிரம், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். இந்தத் தொகை, முதலீட்டு தொகையாக சமூகநலத் துறையின் சார்பில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் செலுத்தப்படும். பெண் குழந்தையின் 18 வயதுக்குப் பிறகு வட்டியுடன் கூடிய முதிர்வுத் தொகை வழங்கப்படும்.
தகுதிகள் என்ன?
* இத்திட்டத்தின் பயனாளிகளுடைய குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.
* விண்ணப்பிக்கும்போது குழந்தைகளின் பெற்றோர் தமிழகத்தில் 10 ஆண்டுகள் தொடர்ந்து வசிப்பவராக இருக்க வேண்டும்.
* குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை அல்லது இரு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும்.
* ஆண் குழந்தை இருக்கக் கூடாது, எதிர்காலத்தில் ஆண் குழந்தையை தத்தெடுக்கவும் கூடாது.
* 40 வயதுக்குள் பெற்றோர் குடும்பக் கட்டப்பாடு செய்திருக்க வேண்டும்.