”இவன் இன்னும் திருந்தல மாமா” கொண்டாட கிளம்பிய மக்கள்.. திண்டாட்டத்தில் விட்ட ஏர் இந்தியா
இத்தாலி நாட்டின் மிலன் நகரிலிருந்து டெல்லிக்குப் புறப்படவிருந்த AI138 விமானத்தில் 256 பயணிகள் மற்றும் 10 பணியாளர்கள் பயணிக்கத் தயாராக இருந்தனர்.

டெல்லிக்கு புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டதால், தீபாவளிக்கு முன்னதாக நூற்றுக்கணக்கான இந்தியர்கள் இத்தாலியில் சிக்கித் தவித்தனர்.
மிலனில் சிக்கிய 256 பயணிகள்
இத்தாலி நாட்டின் மிலன் நகரிலிருந்து டெல்லிக்குப் புறப்படவிருந்த AI138 விமானத்தில் 256 பயணிகள் மற்றும் 10 பணியாளர்கள் பயணிக்கத் தயாராக இருந்தனர். ஆனால், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அக்டோபர் 17-ஆம் தேதி விமானம் ரத்து செய்யப்பட்டது என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
“பாதுகாப்பு முதலில்” – ஏர் இந்தியா விளக்கம்
"அனைத்து பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை அளித்தே இந்த முடிவு எடுக்கப்பட்டது," என்று ஏர் இந்தியா அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், விமானத்தை இயக்க திட்டமிடப்பட்ட விமானத்தில் நீட்டிக்கப்பட்ட தொழில்நுட்பத் தேவை ஏற்பட்டதால், அதை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறியுள்ளது.
தங்குமிடம் மற்றும் உணவு ஏற்பாடு
விமானம் ரத்து செய்யப்பட்ட பிறகு, சிக்கித் தவித்த பயணிகளுக்கு ஹோட்டல் தங்குமிடம் மற்றும் உணவு உள்ளிட்ட அனைத்து தரைவழி உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
“விமான நிலையத்திற்கு அருகே குறைந்த எண்ணிக்கையிலான பயணிகள் இருந்ததால், அருகிலுள்ள பகுதிகளில் தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன,” என ஏர் இந்தியா மேலும் தெரிவித்துள்ளது.
மாற்று விமானங்களில் முன்பதிவு
பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவருக்கும் அக்டோபர் 20 அல்லது அதற்குப் பிறகு டெல்லி செல்லும் மாற்று விமானங்களில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
அதோடு, ஷெங்கன் விசா அக்டோபர் 20-ஆம் தேதி முடிவடையும் ஒரு பயணிக்காக, விசா விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில், அக்டோபர் 19-ஆம் தேதி புறப்படும் மற்றொரு விமானத்தில் அவர் மீண்டும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளார்.
“சிரமத்திற்கு வருந்துகிறோம்” – ஏர் இந்தியா
இந்த இடையூறால் பாதிக்கப்பட்ட பயணிகளிடம் ஏர் இந்தியா மனமார்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளது.
“எங்கள் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பும் நலனும் எப்போதும் எங்களின் முன்னுரிமை. ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். அனைத்து பயணிகளுக்கும் தேவையான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன,” என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.






















