Womens Hockey Caste Slur | விடாமல் துரத்தும் தீ : மகளிர் ஹாக்கி போட்டி தோல்விக்கு, இந்திய வீராங்கனை குடும்பத்தின் மீது சாதிய தாக்குதல்
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ரோஷ்னாபாத் கிராமத்தில் வசிக்கும் வந்தனா கட்டாரியாவின் வீட்டின் முன்பு சாதிய வன்மத்தை விதைக்கும் விதமான சம்பவம் நடைபெற்றுள்ளது
ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி அர்ஜென்டினாவிடம் தோல்வியடைந்ததை சில நிமிடங்களில், வந்தனா கட்டாரியாவின் வீட்டிற்கு முன் சாதிய வன்மத்தை விதைத்துள்ளனர்.
ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியா மகளிர் அணி முதன் முறையாக அரை இறுதிக்கு முன்னேறி வரலாற்று சாதனை படைத்தது. முன்னதாக, ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய மகளிர் ஹாக்கி அணி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து, ஜெர்மனி, கிரேட் பிரட்டன், ஆகிய அணிகளிடம் படுதோல்வியடைந்தது. இருப்பினும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் அயர்லாந்து, தென் ஆப்ரிக்கா போன்ற அணிகளை வென்றது. இதில், குறிப்பாக தென்ஆப்பிரிக்கா உடனான ஆட்டத்தில் வந்தனா கட்டாரியா அடித்த மூன்று கோல்கள் ஆட்டத்தின் போக்கை மாற்றி அமைத்தது.
இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறி வரலாற்று சாதனையாகவும் கருதப்பட்டது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற அரையிறுதியில் இந்திய மகளிர் அணி அர்ஜென்டினா அணியை எதிர்த்து விளையாடியது. இதில், கடைசி வரை போராடிய இந்திய மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் அர்ஜென்டினாவிடம் தோல்வி கண்டது.
சாதிய வன்மம்: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ரோஷ்னாபாத் கிராமத்தில் வசிக்கும் வந்தனா கட்டாரியாவின் வீட்டின் முன்பு சாதிய வன்மத்தை விதைக்கும் விதமான சம்பவம் நடைபெற்றுள்ளது.
வந்தனாவின் கிராமத்தைச் சேர்ந்த உயர்சாதி இளைஞர்கள் சிலர், வந்தனா கட்டாரியாவின் வீட்டின் முன்பு, பட்டாசு வெடித்தும், கேலிசெய்யும் விதமாக நடனமாடியும், சாதிய அடையாள கோஷங்களையும் எழுப்பியுள்ளனர். மேலும், இந்திய மகளிர் ஹாக்கி அணியில் தலித் பிரிவினர் அதிகமிருப்பதால் தோல்வியடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
வந்தனாவின் குடும்ப உறுப்பினர்கள் அளித்த புகாரின் பேரில், காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பான விசாரணையில், வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Uttarakhand | We received a complaint from Women's hockey player Vandana Kataria's brother over casteist slurs by neighbours against family after Olympic loss. FIR lodged under Sec 504 of IPC & Sec 3 of SC/ST Act. One held. Probe is on: Senthil Abudai Krishnaraj S, SSP Haridwar pic.twitter.com/8VVmqrqanm
— ANI (@ANI) August 5, 2021
வந்தனாவின் குடும்ப உறுப்பினர்கள் அளித்த புகாரில், "எங்களைப் பார்ததவுடன் சாதிய வன்மத்தை தெளிக்கும் பேச்சுக்கள் அதிகமாகின. எங்களை குடும்பத்தை அவதூராக பேசத் தொடங்கினர். தலித் பிரிவினர் அதிகமாக இடம்பெற்ற காரணத்தினால் இந்திய அணி தோல்வி அடைந்ததாகவும்,மற்ற எந்தவொரு விளையாட்டிலும் தலித் பிரிவனரை சேர்க்க கூடாது என்றும் கோஷமிட்டனர்" என்று தெரிவிக்கப்பட்டது.