இந்தியாவுடன் கைக்கோர்த்த ஓமன்.. உலக நாடுகளை மிரள வைத்த கடற்பயிற்சி!
இந்தியக் கடற்படை ஓமன் ராயல் கடற்படையின் அல் சீப் கப்பலுடன் கோவா கடற்கரைக்கு அப்பால் இந்தோ-ஓமன் இருதரப்பு கடற்படைப் பயிற்சியில் ஈடுபட்டன.
இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் திரிகண்ட் மற்றும் டோர்னியர் கடல்சார் ரோந்து விமானங்கள், ஓமன் ராயல் கடற்படையின் அல் சீப் கப்பலுடன் அக்டோபர் 13 முதல் 18 வரை கோவா கடற்கரைக்கு அப்பால் இந்தோ-ஓமன் இருதரப்பு கடற்படைப் பயிற்சியில் ஈடுபட்டன.
புவிசார் அரசியல்:
மாறி வரும் உலக சூழலுக்கு மத்தியில் அமெரிக்காவுக்கு பெரும் சவால்விடுத்து வரும் சீனா, அனைத்து வகைகளிலும் தன்னை தயார்படுத்தி வருகிறது. பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தன்னை பலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, உக்ரைன் விவகாரத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ரஷியாவை கண்டு, அதிலிருந்து பாடம் கற்று கொண்டுள்ளது. அதன் விளைவாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் ரஷியா மீது அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இது, தனக்கு நேர்ந்திடாதவாறு தடுத்திடும் நோக்கில் வெளிநாடுகளில் கடற்படை தளங்களை அமைக்க சீனா திட்டமிட்டு வருகிறது.
தன் மீது பொருளாதார தடை விதித்தாலும் அதை எதிர்கொண்டு, தங்கள் நாட்டு கப்பல்கள் தடையின்றி செல்வதற்கு வெளிநாட்டில் கட்டப்படும் கடற்படை தளங்களை பயன்படுத்த சீனா திட்டமிட்டு வருகிறது. இதன்மூலம், தங்களின் கடல்வழி பாதையை பலப்படுத்த உள்ளது.
இந்தியாவுடன் கைக்கோர்த்த ஓமன்:
இந்த நிலையில், ஓமனுடன் இணைந்து இந்தியா நடத்திய கடற்பயிற்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த பயிற்சி இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டன. கடந்த அக்டோபர் மாதம் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை துறைமுக கட்டமும், அதைத் தொடர்ந்து கடல் கட்டமும் நடந்தன.
துறைமுக நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, துறைசார் நிபுணர்களின் பரிமாற்றங்கள் மற்றும் திட்டமிடல் மாநாடுகள் உட்பட தொழில்முறை கலந்துரையாடல்களில் இரு கடற்படைகளைச் சேர்ந்த பணியாளர்கள் ஈடுபட்டனர்.
பயிற்சியின் ஒரு பகுதியாக விளையாட்டு போட்டிகளும் சமூக செயல்பாடுகளும் நடத்தப்பட்டன. கடந்த அக்டோபர் 16 முதல் 18 வரை நடத்தப்பட்ட கடல் பயிற்சிக் கட்டத்தில், இரண்டு கப்பல்களும் பல்வேறு பரிணாமங்களை மேற்கொண்டன.
ஒருங்கிணைந்த ஹெலிகாப்டர், ஐஎன்எஸ் திரிகண்டில் இருந்து இயக்கப்பட்டது. இந்தப் பயிற்சி கூட்டுத் தன்மையை வலுப்படுத்த உதவியது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஒத்த கருத்துடைய நாடுகளுடன் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர வளர்ச்சிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்தப் பயிற்சி மேலும் உறுதிப்படுத்தியது.