Galwan Valley Clash: கல்வான் பள்ளத்தாக்கு மோதல் யார் காரணம்? சீனாவின் கருத்துக்கு இந்தியா பதில்
கடந்தாண்டு கல்வான் பகுதியில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் இந்தியாவின் ஒருதலைபட்சமான அத்துமீறலால் ஏற்பட்டது. சீனாவின் எல்லைக்குள் ஊடுருவ பல முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன
எல்லையில் தற்போதைய நிலையை மாற்ற இந்தியா ஒருதலைப்பட்சமாக மேற்கொண்ட முயற்சிகள் காரணமாகத் தான் கடந்தாண்டு ஜூன் 15 ஆம் தேதி கல்வான் பகுதியில் தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக சீனாவின் கருத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், இந்தியா- சீனா எல்லைப் பகுதிகளில் தொடரும் மோதல் போக்கை சமாளிக்க புதிதாக உடன்படிக்கைகளும், புரிந்துணர்வு ஒப்பந்தகளும் மேற்கொள்ளப்படுமா என்ற கேள்விக்கு சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளார் பதிலளித்தார். அப்போது, இந்தியாவின் ஒருதலைப்பட்சமான செயல்பாடுகள் தான் மோதலுக்கு வழிவக்குத்தது என்று தெரிவித்தார்.
மேலும், எல்லைப் பிரச்சினை மிகவும் சிக்கலானது. அதனை பரஸ்பரம் ஒப்புக்கொள்ளக்கூடிய வகையில் அமைதியான பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்வதற்கு இந்தியாவும், சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளன. இருதரப்புக்கும் பொதுவான உண்மையான கட்டுப்பாட்டு கோடு (எல்ஏசி) இல்லாததால், எல்லையில் அமைதியைப் பராமரிக்க பல்வேறு உடன்படிக்கைகளை இருநாடுகளும் வகுத்து, நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறது. ஆனால், கடந்தாண்டு கல்வான் பகுதியில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் இந்தியாவின் ஒருதலைபட்சமான அத்துமீறலால் ஏற்பட்டது. சீனாவின் எல்லைக்குள் ஊடுருவ பல முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன " என்று தெரிவித்தார்.
கல்வான் பகுதியில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் கர்னல் சந்தோஷ் பாபு மற்றும் 19 இந்திய ராணுவத்தினர் பேர் கொல்லப்பட்டனர். சீன தரப்பில் குறைந்தது 4 வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சீனாவின் இந்த குற்றச்சாட்டை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "சீனாவின் இந்த கருத்தை இந்தியா முற்றிலும் நிராகரிக்கிறது. கடந்தாண்டு லடாக் பகுதியில் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்த நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது. கல்வான் பகுதியில் நடந்த வன்முறையானது, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் சீன தரப்பினர் கட்டுமானப் பணிகள் மேற்கொண்டதாலும், அதை நிறுத்த மறுத்த காரணத்தாலும் தான் ஏற்பட்டது. சீனாவின் இந்த அத்துமீறல் இருதரப்பு உறவுகளையும் பாதித்தது" என்று தெரிவித்தார்.
இந்திய அரசின் பதில்:
முன்னதாக, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் விளக்கமளித்தார். அதில், 1993 மற்றும் 1996 உடன்படிக்கைகளின்படி, எல்ஏசி நெடுகிலும், இருதரப்பு பகுதியில் குறைந்தபட்ச அளவுக்கு தங்கள் படைகளை நிறுத்திக்கொள்ளலாம் என்றும், எல்ஏசி-யை இருதரப்பும் மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்றும் ஒப்புகொள்ளப்பட்டது.
ஆனால், இந்த ஆண்டு மே மாத தொடக்கத்தில், கல்வான் பள்ளத்தாக்கில் நமது படைகள் வழக்கமான ரோந்து மேற்கொள்ள சீனப்படையினர் இடையூறு செய்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மே மாத மத்தியில், மேற்கு பகுதியில் கொங்கா லா, கோக்ரா, பான்காங் ஏரியின் வடகரை ஆகிய இடங்களில், சீனத்தரப்பு நமது எல்லைக்குள் ஊடுவ பல முறை முயற்சிகள் மேற்கொண்டன. இந்த முயற்சிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து நமது ஆயுதப்படையினர் உரிய முறையில் பதிலடி கொடுத்ததாகக் கூறினார்.
மோதல் நிலைக்கு தீர்வு காண சீனத்தரப்புடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் போதே, ஆகஸ்ட் 29, 30 இரவில் சீன ராணுவம் பான்காங் ஏரியின் தென்கரைப் பகுதியில் மீண்டும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், ஆனால், நமது படையினர் சரியான முறையில் செயல்பட்டு அந்த முயற்சிகளை முறியடித்தது. சீனாவின் இந்த நடவடிக்கைள் 1993, 1996 உடன்படிக்கைகளை மீறுவதாக அமைந்திருந்தன என்று அவர் கூறினார்.