குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசி.. உலகத்திற்கே முன்மாதிரியான இந்தியா
இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்படாத குழந்தைகளே இல்லை என்ற நிலையை உருவாக்கி அனைத்துக் குழந்தைகளுக்கும் தடுப்பூசிகளைச் செலுத்த நடப்பு ஆண்டில் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நோய்த் தடுப்பிலும் ஆரோக்கிய பராமரிப்பிலும் தடுப்பூசி மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாக உள்ளது. நோய்த்தடுப்பில் இந்தியாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு அதன் அனைவருக்குமான நோய்த்தடுப்பு திட்டம் (UIP) மூலம் தெளிவாகிறது.
குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசி:
இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 2.9 கோடி கர்ப்பிணிப் பெண்களுக்கும் 2.6 கோடி குழந்தைகளுக்கும் (1 வயது வரை உள்ள குழந்தைகள்) இலவச தடுப்பூசி போடப்படுகிறது. நாட்டின் சுகாதாரப் பணியாளர்கள் 1.3 கோடிக்கும் மேற்பட்ட நோய்த்தடுப்பு முகாம்களை நடத்துகிறார்கள்.
நாடு முழுவதும் தொடர்ச்சியான, முயற்சிகள், தடுப்பூசி இயக்கங்கள், இந்த செயல்பாட்டை தீவிரப்படுத்தியதன் விளைவாக, மொத்த மக்கள்தொகையில் தடுப்பூசி செலுத்தாத குழந்தைகளின் சதவீதம் வெகுவாகக் குறைந்துள்ளது. 2023ஆம் ஆண்டில் 0.11 சதவீதத்திலிருந்து 2024ஆம் ஆண்டில் 0.06 சதவீதமாக இது குறைந்துள்ளது.
இந்த அணுகுமுறை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் செல்கிறது. நாட்டில் தடுப்பூசி செலுத்தப்படாத குழந்தைகளே இல்லை என்ற நிலையை உருவாக்கி அனைத்துக் குழந்தைகளுக்கும் தடுப்பூசிகளைச் செலுத்த நடப்பு ஆண்டில் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உலகத்திற்கே முன்மாதிரியான இந்தியா:
இந்த சாதனைகள், இந்தியாவை குழந்தை ஆரோக்கியத்தில் உலகளாவிய முன்மாதிரியாக நிலைநிறுத்தியுள்ளது. இதனை, ஐநா குழந்தை இறப்பு மதிப்பீட்டிற்கான நிறுவனங்களுக்கு இடையேயான குழு (UN IGME), அதன் 2024-ம் ஆண்டு அறிக்கையில் ஒப்புக் கொண்டுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு, மார்ச் 6ஆம் தேதி, அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் உள்ள அமெரிக்க செஞ்சிலுவை சங்க தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவிற்கு தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசிகளை அதிகம் செலுத்தியதற்கான சாம்பியன் விருது வழங்கப்பட்டது.
வயிற்றுப்போக்கு, நிமோனியா, மூளைக்காய்ச்சல் போன்றவை காரணமாக குழந்தைகள் இறப்பது கணிசமாக குறைந்துள்ளது. இதற்கு, உயிர் காக்கும் தடுப்பூசிகளே காரணம்.
தடுப்பூசிகள் செலுத்துவதை அதிகரிக்க எடுக்கப்பட்ட சில முக்கிய நடவடிக்கைகள்:
- தடுப்பூசி போடப்படாத குழந்தைகள் அதிகம் உள்ள 11 மாநிலங்களில் உள்ள 143 மாவட்டங்களில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
- இந்திரதனுஷ் திட்டம் : மாநில அரசுகளுடன் இணைந்து இத்திட்டம் தீவிரப்படுத்தப்பட்டது. இதன் மூலம், 5.46 கோடி குழந்தைகளுக்கும், முன்னர் தடுப்பூசி போடப்படாத அல்லது முழுவதுமாக தடுப்பூசி போடப்பட்ட 1.32 கோடி கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
- பல்ஸ் போலியோ இயக்கங்கள்: கடந்த 2014ஆம் ஆண்டு முதல் போலியோ இல்லாத நிலையை இந்தியா பராமரித்து வருகிறது.
- கிராம சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து: சமூக மட்டத்தில் நோய்த்தடுப்பு மற்றும் வெளிநடவடிக்கைகளுக்காக தொடர்ந்து ஒழுங்கமைக்கப்படுகிறது.
- பல அடுக்கு பணிக்குழுக்கள்: மாநில, மாவட்டம், மற்றும் பகுதி அளவிலான பணிக்குழுக்கள் ஒருங்கிணைந்த தடுப்பூசிப் பணிகளை இந்தக் குழுக்கள் உறுதி செய்கின்றன.
- வழக்கமான தகவல், கல்வி, மக்கள் தொடர்பு இயக்கங்கள்: விழிப்புணர்வை அதிகரிக்கவும் தடுப்பூசிகள் மீதான தயக்கத்தை ஒழிக்கவும் இந்தப் பிரச்சார இயக்கங்கள் உதவுகின்றன.





















