"ஹமாஸை கண்டிக்காத தீர்மானம்" : ஐநாவில் இந்தியா எடுத்த நிலைப்பாட்டின் பின்னணி..
அக்டோபர் 7ஆம் தேதி, ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலை தீர்மானம் வெளிப்படையாக கண்டிக்காத காரணத்தால் இந்தியா இந்த முடிவு எடுத்திருப்பதாக ABP LIVEக்கு அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.
காசாவில் வான்வழி தாக்குதலை நிறுத்த கோரி ஐநா பொதுச் சபை அழைப்பு விடுத்திருந்தாலும், மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து, இந்த விவகாரத்தில் இந்தியா பின்வாங்க முடிவெடுத்துள்ளது. அக்டோபர் 7ஆம் தேதி, ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலை தீர்மானம் வெளிப்படையாக கண்டிக்காத காரணத்தால் இந்தியா இந்த முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ABP LIVEக்கு கிடைத்த அதிகாரப்பூர்வ தகவலின்படி, "போர் நிறுத்த தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விடுவதற்கு முன், அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் நடத்திய தாக்குதல்களை உள்ளடக்கி திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதற்கு, இந்தியா ஆதரவாக வாக்களித்தது. இருப்பினும், அந்த குறிப்பிட்ட திருத்தம் 88 வாக்குகளை மட்டுமே பெற்றது. தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை பெறத் தவறியதால் அது செல்லாது என அறிவிக்கப்பட்டது.
எங்கள் அணுகுமுறையின் அனைத்து கூறுகளும் தீர்மானத்தின் இறுதி உரையில் இடம்பெறாத நிலையில், அதை ஏற்றுக்கொள்வதற்கான வாக்கெடுப்பில் நாங்கள் வாக்களிக்கவில்லை. பயங்கரவாதத்துடன் எந்தவிதமான சமரசமும் இருக்க கூடாது. வாக்கெடுப்பின் போது, பாலஸ்தீனம் மீதான மத்திய அரசின் நிலைப்பாட்டை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தியது.
ஐநா விதிகளை பொறுத்தவரையில், தீர்மானத்துக்கு வாக்களிக்காமல் புறக்கணிக்கும் உறுப்பினர்கள் குறிப்பிட்ட தீர்மானத்திற்கு வாக்களிக்காதவர்களாக கருதப்படுகிறார்கள். இஸ்ரேலியப் படைகளுக்கும் காசாவில் உள்ள ஹமாஸ் படையினருக்கும் இடையே நடந்து வரும் போரை மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கூறி கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை புறக்கணித்த 45 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
நிலத்தின் வழியே தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் விரிவுப்படுத்தி, குண்டுகள் வீசுவதை தீவிரப்படுத்தியிருப்பதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. இந்த சமயத்தில், ஐநாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், "அந்நிய நாடு படையெடுத்திருக்கும் பகுதியில் உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் சேவைகளை தொடர்ச்சியாக போதுமான அளவில் தடையின்ற வழங்க வேண்டும்" என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை, காசாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 7,000ஐ தாண்டியுள்ளது. காசாவில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சகம், இதுவரை 7,028 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகக் கூறுகிறது.
இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு படை, "போர் விமானம் மூலம் ஹமாஸின் வான்படை தலைவரான அசெம் அபு ரகாபா கொல்லப்பட்டுள்ளார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி மேற்கொண்ட தாக்குதலில், முக்கிய பங்காற்றியவர் அசெம் அபு ரகாபா. மேலும், பாராகிளைடர்களில் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள், இவரின் கட்டளையின் கீழ்தான் செயல்பட்டுள்ளனர். இஸ்ரேல் பாதுகாப்பு படை மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களுக்கு இவரே பொறுப்பு" என தெரிவித்துள்ளது.
"இரு நாட்டு தீர்வுக்கு இந்தியா எப்போதும் ஆதரவளித்து வருகிறது"
ஐநா தீர்மானம் மீதான வாக்களிப்பின்போது இந்தியா எடுத்த நிலைபாட்டுக்கு விளக்கம் அளித்து பேசிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர துணை தூதர் யோஜனா படேல், "அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிர்ச்சிகரமானவை. கண்டனத்துக்கு உரியவை. பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களை நினைத்து வருந்துகிறோம். அவர்களை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
காசாவில் நடந்து வரும் மோதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள், தீவிரமானவையாக எடுத்து கொள்ளப்படுகிறது. தொடர்ச்சியான கவலையை தருகிறது. பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் உயிரைக் கொடுத்து வருகின்றனர். இந்த மனிதாபிமான நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும். சர்வதேச சமூகத்தின் முயற்சிகளையும், காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதையும் நாங்கள் வரவேற்கிறோம். இந்த முயற்சியில் இந்தியாவும் பங்களித்துள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் இரு நாட்டு தீர்வுக்கு இந்தியா எப்போதும் ஆதரவளித்து வருகிறது. இறையாண்மைமிக்க, சுதந்திரமான பாலஸ்தீனத்தை நிறுவுவதற்கு இது வழிவகுக்கும். பாதுகாப்பாகவும், அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள், இஸ்ரேலுடன் சமாதானத்துடன் அருகருகே வாழ வேண்டும். இதற்காக, மோதல் தீவிரமடைவதைத் தடுக்கவும், வன்முறையைத் தவிர்க்கவும், நேரடி சமாதானப் பேச்சுவார்த்தைகளை விரைவாக மீண்டும் தொடங்குவதற்கான நிலைமைகளை உருவாக்குவதற்கு உழைக்குமாறு இரு தரப்பையும் கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.