Lok Sabha NEET: பதவியேற்கும்போதே சம்பவம் செய்த சுயேச்சை எம்.பி., - நீட் மறுதேர்வு நடத்தக்கோரி டி-ஷர்ட், வாக்குவாதம்
Lok Sabha NEET: மக்களவையில் பதவிப்பிரமாணம் செய்யும்போதே வாக்குவாதத்தில் ஈடுபட்ட, எம்.பியின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
Lok Sabha NEET: மக்களவை உறுப்பினர் பப்பு யாதவ் பதவிப்பிரமாணம் செய்யும்போது, நீட் மறுதேர்வு வேண்டும் என வலியுறுத்திய டி-ஷர்ட் அணிந்திருந்தது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்பு:
நடந்து முடிந்த 18வது மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், பதவியேற்கும் நிகழ்வு நாடாளுமன்றத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. அப்போது, பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு உறுப்பினரும், பல்வேறு பிரச்னைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அந்த வரிசையில் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற, பப்பு யாதவ் என்பவர் பதவிப்பிரமாணம் மேற்கொள்ளும்போது செய்த செயல்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
நீட் மறுதேர்வு கோரிக்கை:
பப்பு யாதவ் பதவிப்பிரமாணம் மேற்கொள்ளும்போது, தனது சட்டைக்குள் அணிந்திருந்த டி-ஷர்ட்டில் #RENEET என்ற வாசகம் இடம்பெற்று இருந்தந்து. நீட் தேர்வு மோசடிகளுக்கு எதிரான போராட்டம் வடமாநிலங்களிலும் சூடுபிடித்துள்ள நிலையில், அண்மையில் நடந்த தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. அதனை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்கும் வகையில் தான், பப்பு யாதவ் #RENEET என்ற வாசகம் இடம்பெற்று இருந்த டி-ஷர்ட்டை பதவிப்பிரமாணத்தின் போது அணிந்திருந்தார்.
#WATCH | Independent MP from Bihar's Purnea, Pappu Yadav wears a t-shirt with the words 'ReNEET' on it as he takes oath as a member to the 18th Lok Sabha and concludes his oath by saying, "Re-NEET, special status for Bihar, Seemanchal Zindabad, Manavtavaad Zindabad, Bhim… pic.twitter.com/UYuwp82ypQ
— ANI (@ANI) June 25, 2024
முழக்கமும், வாக்குவாதமும்..!
மைதிலில் மொழியில் பதவிப்பிரமாணத்தை முடித்ததுமே ”நீட் மறுதேர்வு, பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து, சீமாஞ்சல் ஜிந்தாபாத், மானவ்தவாத் ஜிந்தாபாத், பீம் ஜிந்தாபாத், சம்விதன் ஜிந்தாபாத்” என முழக்கங்களை எழுப்பினார். தொடர்ந்து மக்களவை இடைக்கால சபாநாயகரிடம் சென்று வாழ்த்துகளை பெற்றார். அப்போது, மீண்டும் நீட் தேர்வு தொடர்பாக முழக்கங்களை எழுப்ப முயல, நாடாளுமன்ற விவகார அமைச்சரான கிரண் ரிஜிஜூ அவரை தடுத்து நிறுத்தினார். அதற்கு பதிலளிக்கையில், 'நான் ஆறு முறை எம்.பி.யாக இருந்துள்ளேன். எனக்குக் கற்றுத் தருவீர்களா?' என பப்பு யாதவ் பதிலடி தந்துள்ளார். இதுதொடர்பான வீடியொ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
யார் இந்த பப்பு யாதவ்?
ராஜேஷ் ரஞ்சன் எனப்படும் இவர் பப்பு யாதவ் என்ற பெயரால் பொதுமக்களால் அறியப்படுகிறார். பூர்ணியா மற்றும் மதேபுரா தொகுதிகளில் இருந்து 1991, 1996, 1999, 2004, 2014 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் மக்களவைக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளார். சுயேச்சைக் சமாஜ்வாதி கட்சி, லோக் ஜனசக்தி மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்டும் வெற்றி பெற்றுள்ளார். ஜன் அதிகார் என்ற தனது கட்சியை மக்களவை தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியில் இணைத்தார். ஆனால், அவருக்கு தேர்தலில் போட்டியிட கட்சி வாய்ப்பு மறுத்த நிலையில், பப்பு யாதவ் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு தேர்தலில், முன்னாள் மத்திய அமைச்சரான சரத் யாதவை பப்பு யாதவ் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.