Timeline 2023 : எப்படி போச்சு 2023? ஒவ்வொரு மாதமும் நடந்த முக்கிய சம்பவங்கள், ஆண்டின் வரலாற்று நிகழ்வுகள்..!
Timeline of 2023: 2023 ஆண்டின் ஒவ்வொரு மாதத்திலும் நடந்த முக்கிய மற்றும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வுகள் மற்றும் சம்பவங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
Timeline of 2023: 2023 ஆண்டின் ஒவ்வொரு மாதத்திலும் நடந்த முக்கிய மற்றும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வுகள் மற்றும் சம்பவங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
2023ம் ஆண்டின் முக்கிய நிகவுகள்:
மனிதன் தனது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு விதமான அனுபவங்களை வாரி வழங்கிக் கொண்டு இருக்கிறது. அதில் மகிழ்ச்சி, வேதனை, கவலை, உற்சாகம் என பல்வேறு உணர்வுகளும் அடங்கும். அந்த வகையில் தான் நேற்று தொடங்கியது போன்று இருந்த 2023ம் ஆண்டும், அதற்குள் தனது கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருக்க பல அனுபவங்களை வழங்கியுள்ளது. அதன்படி, கடந்த 12 மாதங்களில் தேசிய அளவில் மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிகழ்வுகள் தொடங்கி, நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய சம்பவங்கள் வரையில், 2023ம் ஆண்டு நாம் கடந்து வந்த பாதை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
2023 கடந்து வந்த பாதை:
ஜனவரி, 2023: ஆண்டின் முதல் மாதம் விழாக்கோலத்துடன் முடியும் என எதிர்பார்த்த நிலையில், நாட்டையே உலுக்கும் விதமாக மல்யுத்த வீரர்களின் போராட்டம் அமைந்தது. பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக பல இந்திய மல்யுத்த வீரர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மல்யுத்த சம்மேளனத்தை கலைத்து அதன் தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
பிப்ரவரி, 2023: ரத்து செய்யப்பட்ட டெல்லி கலால் வரி விதிப்பில் முறைகேடு தொடர்பான விசாரணையால் பிப்ரவரி மாதமும் டெல்லியில் பரபரப்பிற்கு பஞ்சாமில்லமல் போனது. சிபிஐ நடத்திய சுமார் 8 மணி நேர விசாரணைக்குப் பிறகு டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். இது டெல்லி அரசியலில் பெரும் பிரச்னையாக நீடித்து, முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் வரையிலும் விசாரணைப் படலம் விரிவடைந்துள்ளது.
மார்ச், 2023: பல்வேறு அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் வடகிழக்கு மாநிலங்களில் தேர்தல் பரபரப்பு மார்ச் மாதத்தில் சூடுபிடித்தது. அதன் முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாக அமைந்து, பாஜகவை வட இந்தியாவில் மேலும் வலுவாக்கியது. ஆனால், அந்த நிகழ்வையே மிஞ்சும் விதமாகவும், அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தரும் வகையில் ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் அமைந்தது. மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்ததால், மார்ச் 23ம் தேதி ராகுல் காந்திய்ன் எம்.பி., பதவி பறிக்கப்பட்டது.
ஏப்ரல், 2023: இந்தியா அதிகாரப்பூர்வமாக சீனாவை தாண்டி உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறியது. ஐக்கிய நாடுகள் சபையின் கணிப்புகளின்படி, இந்தியாவின் மக்கள்தொகை அடுத்த மூன்று தசாப்தங்களுக்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, ஏப்ரல் 15 அன்று உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையிலேயே, ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃப் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மே, 2023: மணிப்பூரில் பழங்குடியின மாணவர் சங்கத்தால் மே 3 அன்று நடத்தப்பட்ட அணிவகுப்பில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வன்முறை மோதல்கள் வெடித்து. மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேநேரம், மே மாதத்தில் நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் பயன்பாட்டிற்கு வந்தது. ரூ.971 கோடி மதிப்பிலான அந்த கட்டடத்தில் தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் செங்கோலும் வைக்கப்படது.
ஜுன், 2023: நடப்பாண்டில் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கிய சம்பவத்தில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பாஹாநகா பஜார் பகுதியில் நடந்த ரயில் விபத்து தவிர்க்க முடியாததாக உள்ளது. தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீதுஷாலிமர் - சென்னை கோரமண்டல் விரைவு ரயில் மோதியது. அப்போது, எதிர் திசையில் வந்த பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு ரயிலின் கடைசி பெட்டிகளும் விபத்தில் சிக்கி தடம்புரண்டன. இந்த கோர விபத்தில் 295 பேர் உயிரிழந்தனர். 1,100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஜுலை, 2023: மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடயே ஏற்பட்ட மோதலின் போது, இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழத்துச் செல்லப்பட்ட கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்த மனிதகுலத்தையே உலுக்கி எடுத்தது. அதேநேரம், நாடே பெருமை கொள்ளும் விதமாக நிலவின் தென் துருவத்தை ஆராயும் நோக்கில் சந்திரயான் 3 விண்கலம் ஜுலை 14ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஆகஸ்ட், 2023: நீண்ட நெடும் பயணத்தை தொடர்ந்து சந்திரயான் 3 விண்கலத்தின் ரோவர் நிலவின் தென்துருவத்திற்கு அருகில், ஆகஸ்ட் 23ம் தேதி வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இதன் மூலம், இந்த சாதனையை நிகழ்த்திய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. அதோடு, சூரத் நீதிமன்றம் விதித்த தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தால், ராகுல் காந்தி மீண்டும் எம்.பி., ஆனார்.
செப்டம்பர், 2023: செப்டம்பர் மாதம் முழுவதையும் ஜி20 உச்சி மாநாடு ஆக்கிரமித்துக் கொண்டது. இந்த மாநாட்டிற்காக உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளின் தலைவர்கள் டெல்லியில் திரள, ஒட்டுமொத்த நகரமும் விழாக்கோலம் பூண்டு இருந்தது. சர்வதேச அளவில் மோடியை வலுவான தலைவராக காட்சிப்படுத்த இந்த மாநாடு மிகவும் உதவிரமாக இருந்ததாக அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர். இதனிடையே, மணிப்பூர் கலவரம் தீவிரமடைய 175 க்கும் மேற்பட்டோர் உயிரிழக்க, 1,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமானோர் புலம்பெயரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அக்டோபர், 2023: சிக்கிம் மாநிலத்தில் இடைவிடாத பெய்த மழை காரணமாக தெற்கு லொனாக் ஏரியின் கரை உடைந்து, கீழ்நிலைப் பகுதிகளில் தண்ணீர் வெளியேறியதில் முகாம்களில் இருந்த ராணுவ வீரர்கள் உட்பட 70 பேர் கொல்லப்பட்டனர் . அந்த மாதத்தின் பிற்பகுதியில், தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணங்களை அங்கீகரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை சட்டமன்றத்தால் மட்டுமே செய்ய முடியும் என்றும், நீதிமன்றம் அதில் தலையிட முடியாது என்றும் கூறியது.
நவம்பர், 2023: மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநில தேர்தல் பரப்புரை மற்றும் வாக்குப்பதிவால் நவம்பர் மாதம் முழுவதுமே அரசியல் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் இருந்தது. அரசியல் கட்சிகள் மாறி மாறி குற்றம்சாட்ட, பரப்புரை அனல்பறந்தது. தீபாவளியன்று உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி பகுதியில் நடைபெற்ற விபத்தில், 41 தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டனர். 17 நாட்களின் கடும் முயற்சிக்குப் பிறகு அத்தனை பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதனிடையே, ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய அணி தோல்வியுற்று ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
டிசம்பர், 2023: 5 மாநில தேர்தல் முடிவில் ஆட்சியை கைப்பற்றிய மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் புதுமுகங்களை முதலமைச்சராக்கி பாஜக அரசியல் வட்டாரத்தை பரபரப்பில் ஆழ்த்தியது. நாடாளுமன்ற தாக்குதலின் 22ம் ஆண்டு நினைவு நாளான கடந்த 13ம் தேதி, புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் நடைபெற்ற பாதுகாப்பு அத்துமீறல் பூதாகரமாக வெடித்துள்ளது. இதனிடையே, மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4ம் தேதி கொட்டி தீர்த்த கனமழையால் தமிழ்நாட்டின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெரும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு வருவதற்குள்ளாகவே கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் கொட்டிய கனமழையால், தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.