மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு: நிலைகுலைந்த ஐஐடி பேராசிரியர் - மாணவர்கள் ஷாக்
கான்பூர் ஐஐடியில் முன்னாள் மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்த 53 வயது மூத்த பேராசிரியருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அதை தொடர்ந்து அவர் மரணம் அடைந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சமீப காலமாக, இளைஞர்கள் திடீர் திடீரென உயிரிழப்பது தொடர் கதையாகிவிட்டது. குறிப்பாக, 18 வயதிலிருந்து 50 வயதுக்கு இடைப்பட்டவர்கள் அகால மரணம் அடைவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு என்ன காரணம் என தெரியாததால் மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் ஐஐடியில் முன்னாள் மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்த 53 வயது மூத்த பேராசிரியருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, அதை தொடர்ந்து அவர் மரணம் அடைந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேடையில் உரையாற்றியபோது மாரடைப்பு:
இதுகுறித்து பிடிஐ வெளியிட்ட செய்தியில், "மாணவர் விவகாரங்களின் டீனும், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறைத் தலைவருமான சமீர் காண்டேகர், உரையாற்றிக் கொண்டிருந்தபோது மேடையில் சரிந்து விழுந்தார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், கொண்டு வரும்போதே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு அதிக கொழுப்பு அளவு இருப்பது கண்டறியப்பட்டதாக அவரது சக ஊழியர் ஒருவர் கூறினார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
சக பேராசிரியர் உயிரிழந்தது பற்றி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தகவல் பகிர்ந்த கொண்ட ஐஐடி கான்பூர் முன்னாள் இயக்குநர் அபய் கரண்டிகர், "காண்டேகரின் திடீர் மரணம் கண்டு அதிர்ச்சியடைகிறேன். சிறந்த ஆசிரியராகவும் ஆராய்ச்சியாளராகவும் விளங்கினார். காண்டேகருக்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது.
திடீர் திடீரென ஏற்படும் மாரடைப்புகள்:
கீழே சரிவதற்கு முன்பு அவருக்கு அதிகமாக வியர்க்கத் தொடங்கியது. அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு மிகக் குறுகிய நேரமே இருந்தது. அவரது உடல் ஐஐடி-கான்பூர் சுகாதார மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்கும் அவரது ஒரே மகன் பிரவா காண்டேகர் வந்த பிறகுதான் இறுதி சடங்குகள் செய்யப்படும்" என்றார்.
இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "இதை நம்பமுடியவில்லை. எனது நண்பரும் பேராசிரியருமான சமீர் காண்டேகர், திடீரென அகால மரணமடைந்த செய்தி எங்களை ஆழ்ந்த அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. அவர் நேசத்துக்குரிய சக ஊழியர். எப்போதும் ஆற்றலும் உற்சாகமும் நிறைந்தவர்.
இந்த கடினமான சூழலில் அவரது குடும்பத்துடன் சோகத்தை பகிர்ந்து கொள்கிறோம். அவரை அறிந்த அனைவராலும் அவர் பெரிதும் மிஸ் செய்யப்படுவார். அமைதியாக உறங்குகள். அன்பு நண்பரே" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: Sudden Death: திடீர் திடீரென இறக்கும் இளைஞர்கள் ..கொரோனாவின் பின்விளைவுகள் காரணமா? ..ஐசிஎம்ஆர் ஆய்வு சொல்வது என்ன?