தலைநகராகும் காசி... சிறுபான்மையினரிடம் பறிக்கப்படும் வாக்குரிமை... உத்தரப் பிரதேச சாமியார்களின் சர்ச்சைக்குரிய வரைவு
கல்வி, பாதுகாப்பு, சட்டம் - ஒழுங்கு, வாக்களிக்கும் முறை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இதுவரை 32 பக்கங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேச சாமியார்களின் ஒரு பகுதியினர், 'இந்து தேசியத்திற்கான இந்திய அரசியலமைப்பு' என்ற வரைவைத் தயாரித்து வருகின்றனர். 2023ஆம் ஆண்டுக்கான மகா மேளாவின்போது ஏற்பாடு செய்யப்படும் 'தரம் சன்சத்' நிகழ்ச்சியில் இந்த ஆவணம் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பிப்ரவரியில் நடைபெற்ற இந்த ஆண்டு மகா மேளாவின்போது, இந்தியாவை தனி அரசியலமைப்பின் மூலம் இந்து தேசியமாக ஆக்க ‘தரம் சன்சாத்’ நிகழ்ச்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த “அரசியலமைப்புச் சட்டத்தின்” வரைவு 30 பேர் கொண்ட குழுவால் சாம்பவி பீடாதீஸ்வர் தலைமையில் தயாரிக்கப்பட்டு வருகிறது என்று வாரணாசியைச் சேர்ந்த சங்கராச்சார்யா பரிஷத்தின் தலைவர் சுவாமி ஆனந்த் ஸ்வரூப் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய ஸ்வரூப், "இந்த அரசியலமைப்பு 750 பக்கங்களைக் கொண்டதாக இருக்கும். அதன் வடிவம் இப்போது விரிவாக விவாதிக்கப்படும். சமய அறிஞர்கள் மற்றும் பல்வேறு துறை வல்லுனர்களுடன் கலந்துரையாடல் மற்றும் விவாதங்கள் நடத்தப்படும். இதன் அடிப்படையில், பிரயாக்ராஜில் நடைபெற உள்ள 2023ஆம் ஆண்டுக்கான மகா மேளத்தில் பாதி அரசியலமைப்பு (சுமார் 300 பக்கங்கள்) வெளியிடப்படும். அதற்காக ‘தரம் சன்சத்’ நடத்தப்படும்" என்றார்.
கல்வி, பாதுகாப்பு, சட்டம் - ஒழுங்கு, வாக்களிக்கும் முறை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இதுவரை 32 பக்கங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
தலைநகரை மாற்றுவது குறித்து பேசிய அவர், "இந்த இந்து தேசிய அரசியலமைப்பின் படி, டெல்லிக்கு பதிலாக வாரணாசி நாட்டின் தலைநகராக இருக்கும். தவிர, காசியில் (வாரணாசி) ‘மதங்களின் நாடாளுமன்றம்’ கட்டும் திட்டமும் உள்ளது" என்றார்.
வரைவைத் தயாரிக்கும் குழுவில் ஸ்வரூப் ஆகியோர் உள்ளனர். இந்து ராஷ்டிர நிர்மான் சமிதி தலைவர் கமலேஷ்வர் உபாத்யாய், மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பி.என். ரெட்டி, பாதுகாப்பு நிபுணர் ஆனந்த் வர்தன், சனாதன தர்ம அறிஞர் சந்திரமணி மிஸ்ரா, உலக இந்து கூட்டமைப்பின் தலைவர் அஜய் சிங் உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் பேசிய ஸ்வரூப், "இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்ட வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, மியான்மர் உள்ளிட்ட நாடுகள் ஒரு நாள் இந்தியாவில் இணைக்கப்படுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும்" என்றார்.
இந்து தேசியத்தில் சாதி அமைப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து விவரித்த அவர், "அனைத்து சாதி மக்களுக்கும் தேசத்தில் வாழ்வதற்கு வசதியும் பாதுகாப்பும் இருக்கும். மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்து தேசிய அரசியலமைப்பு வரைவின் படி, முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் வாக்களிக்கும் உரிமையைத் தவிர்த்து, ஒரு பொதுவான குடிமகனின் அனைத்து உரிமைகளையும் அனுபவிப்பார்கள்.
சிறுபான்மையினர் வணிகம் செய்வதற்கும், வேலை பெறுவதற்கும், கல்வியைப் பெறுவதற்கும், எந்தவொரு சாதாரண குடிமகனும் அனுபவிக்கும் அனைத்து வசதிகளும் அளிக்கப்படும். ஆனால் அவர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்தலில் போட்டியிடுவதற்கான வயது 25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், 16 வயது நிறைவடைந்த பின்னர் வாக்களிக்கும் உரிமை குடிமக்களுக்கு வழங்கப்படும்.
ஆங்கிலேய காலத்தின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை ஒழித்து, அனைத்தும் 'வர்ணா' அமைப்பின் அடிப்படையில் நடத்தப்படும். ஒவ்வொரு குடிமகனும் கட்டாய இராணுவப் பயிற்சி பெறுவார்கள். விவசாயத்திற்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்படும்" என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்