HP Election : தள்ளாத வயதிலும் ஜனநாயக கடமை...! இமாச்சல் தேர்தலில் வாக்களித்த 105 வயது பாட்டி...!
இமாச்சலப் பிரதேசத் தேர்தலில் 105 வயது நிரம்பிய நாரோ தேவி வாக்களித்தார். தேர்தலின் போது கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் முதியவர்கள் பலரும் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
இமாச்சலப் பிரதேசத் தேர்தலில் 105 வயது நிரம்பிய நாரோ தேவி வாக்களித்தார். நேற்று நடைபெற்ற தேர்தலின் போது கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 70 வயது, 80 வயது மற்றும் 90 வயது முதியவர்கள் பலரும் வரிசையில் நின்று வாக்களித்தனர். இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் 105 வயது நாரோ தேவி வாக்களித்தார். அண்மையில் ஷ்யாம் சரண் நேகி என்ற இந்தியாவின் மூத்த வாக்காளர் உயிரிழந்த நிலையில், நேற்று நாரோ தேவி வாக்களித்தது கவனம் பெற்றுள்ளது.
வயதான வாக்காளர் :
இந்திய தேர்தல் ஆணையம் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டிலிருந்து வாக்களிக்க வசதி செய்து தந்துள்ளது. ஆனாலும் இமாச்சல் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட பலரும் ஆர்வத்துடன் நேரில் வந்து வாக்களித்தனர். இமாச்சல் தேர்தலில் வாக்களிக்க தகுதியான வாக்காளர்களில் 1,21, 409 பேர் 80 வயதுக்கும் மேற்பட்டவர்கள். 1136 பேர் 100 வயதுக்கு மேற்பட்டவர்கள். ஷிம்லாவில் 103 வயதான சர்தார் ப்யார் சிங் வாக்களித்தார்.
இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தம் 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு, மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.
வாக்குப்பதிவு
அம்மாநிலத்தின் தாஷிகாங்கில் உள்ள உலகின் மிக உயரமான வாக்குச் சாவடியில் 52 வாக்காளர்களில் 51 பேர் வாக்களித்துள்ளனர். அங்கு சுமார் 98.08% வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக சிர்மூர் மாவட்டத்தில் 41.89 விழுக்காடு வாக்குகளும், முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூரின் சொந்த மாவட்டமான மண்டியில் 41.17 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளன. அதிக உயரமுள்ள மாவட்டமான லாஹவுல் மற்றும் ஸ்பிட்டியில் 21.95 விழுக்காடு குறைவாகவும், சம்பாவில் மதியம் 1 மணி வரை 28.35 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளன.
நேற்று பதிவான வாக்குகள் வரும் டிசம்பர் 8ம் தேதி குஜராத் தேர்தல் வாக்குகளுடன் சேர்த்து எண்ணப்படும். இன்றைய தேர்தலில் மொத்தம் 412 வேட்பாளர்கள் போட்டியியிட்ட நிலையில், பாதுகாப்பு பணியில் சுமார் 11,000க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
கருத்துக்கணிப்பு :
கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தில் 75.57 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தன. 2017 தேர்தலில் பாஜக 68 இடங்களில் 44 இடங்களை வென்றது, காங்கிரஸ் 21 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இந்தத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றே பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.