Himachal Flood: இமாச்சல் வெள்ளம்… நொடி பொழுதில் வெள்ள நீரில் மாயமான பேருந்து! வைரலாகும் அதிர்ச்சிகரமான வீடியோ!
தண்ணீரில் அடித்து செல்லப்படும் இது போன்ற கனரக வாகனங்கள் குடியிருப்பு கட்டிடங்கள் மீது மோதினால் ஏற்படக்கூடிய சேதத்தை கற்பனை செய்வதே மிகவும் பயங்கரமாக இருப்பதாக பலர் கமென்ட் செய்து வருகின்றனர்.
கனமழையால் இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளத்தில் ஒரு பெரிய பேருந்து அடித்து செல்லப்படும் விடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.
வெள்ளத்தில் மாயமாகும் பேருந்து
கடந்த இரண்டு நாட்களாக இமாச்சல பிரதேச மாநிலத்தில் பெய்த கனமழைக்குப் பிறகு, பாலங்கள் அடித்துச் செல்லப்படுவது, கார்கள் காகிதப் படகுகள் போல மிதப்பது போன்ற பயங்கரமான காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களில் இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட அழிவின் அளவை இந்தக் காட்சிகள் விவரிக்கின்றன. இந்த வகையில் மணாலியில் இருந்து வெளியாகியுள்ள ஒரு சமீபத்திய விடியோ காட்சியில், மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் ஒரு பெரிய பேருந்து ஒன்று தண்ணீரில் விழுங்கப்பட்டு நொடிகளில் காணாமல் செல்வது பதிவாகியுள்ளது. தண்ணீரில் அடித்து செல்லப்படும் இது போன்ற கனரக வாகனங்கள் குடியிருப்பு கட்டிடங்கள் மீது மோதினால் ஏற்படக்கூடிய சேதத்தை கற்பனை செய்வதே மிகவும் பயங்கரமாக இருப்பதாக பலர் கமென்ட் செய்து வருகின்றனர்.
Bus has been swept away somewhere at Manali.#HimachalFloods pic.twitter.com/MswyNJHCXP
— WeAreHimachalis (@WeAreHimachalis) July 10, 2023
கனமழையால் 14 பேர் பலி
மாநில அதிகாரிகளின் கூற்றுப்படி, இமாச்சலில் 72 மணிநேர தொடர் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம், இதுவரை 14 உயிர்களைக் கொன்றுள்ளது. அது மட்டுமின்றி, வரும் நாட்களில் மாநிலத்திற்கு அதிக மழை பெய்யும் என்று IMD கணித்துள்ளது. கனமழைக்குப் பிறகு, மாநிலத்தில் சாலை இணைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் நிலச்சரிவு காரணமாக மண்டி-குலு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளதாக மாநில போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
முதல்வர் வலியுறுத்தல்
இதற்கிடையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு வலியுறுத்தினார். “அடுத்த 24 மணி நேரத்திற்கு மிகக் கனமழை எதிர்பார்க்கப்படுவதால், மாநிலத்தின் அனைத்து மக்களும் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். 1100, 1070, 1077 ஆகிய மூன்று ஹெல்ப்லைன்களை நாங்கள் தொடங்கியுள்ளோம். பேரிடரில் சிக்கியவர்கள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ள இந்த எண்களை நீங்கள் அழைக்கலாம். உங்களுக்கு உதவ நான் 24 மணி நேரமும் தயாராக இருக்கிறேன்,” என்று அவர் ஒரு வீடியோ செய்தியில் கூறினார்.
876 பேருந்து வழித்தடங்கள் பாதிப்பு
இமாச்சலப் பிரதேச சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் 876 பேருந்து வழித்தடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் 403 பேருந்துகள் கனமழையால் வெவ்வேறு இடங்களில் சிக்கித் தவித்தன. ஜூன் 1 முதல் ஜூலை 9 வரையிலான நடப்பு பருவமழை காலத்தில் ஹிமாச்சலில் 271.5 மிமீ சராசரி மழை பெய்துள்ளது, இது 160.6 மிமீ சாதாரண மழைப்பொழிவை விட 69 சதவீதம் அதிகமாகும்.