கேரளாவில் கனமழை: ரெட் அலர்ட் எச்சரிக்கை! சுற்றுலா பயணிகள் ஏமாற்றம், பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!
ஜூலை 21 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதால் வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுத்தது.

கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சற்று முன்னதாக தொடங்கியது. கடந்த 2 வாரமாக மூணாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. கேரளாவில் ஜூலை 21 வரை கன மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மாநிலத்தில் சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஜூலை 21 வரை கன மழைக்கு வாய்ப்புள்ளதால் வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுத்தது.

ரெட் அலர்ட்:
இன்று வயநாடு, கண்ணுார், காசர்கோடு, நாளை கோழிக்கோடு, வயநாடு, கண்ணுார், காசர்கோடு. ஜூலை 20ல் மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணுார், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு அதி தீவிர கன மழைக்கான ' ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டிருந்தது. இன்று இடுக்கி,மலப்புரம்,கோழிக்கோடு, நாளை இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், ஜூலை 20ல் இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, ஜூலை 21ல் கண்ணுார், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கான 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டது.
எல்லோ அலர்ட்: பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு. நாளை பத்தனம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம். ஜூலை 20ல் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம்.
ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 204.4 மி.மீட்டருக்கு அதிகமாகவும், ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களில் 115.6 முதல் 204.4 மி.மீ., வரை, எல்லோ அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களில் 64.5 முதல் 115.5 மி.மீ., வரை மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

படகு சவாரி நிறுத்தம்
மழை எச்சரிக்கையை தொடர்ந்து முணாறு பகுதி அணைக்கட்டுகளில் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன் தினம் முதல் இடுக்கி மாவட்டத்திற்கு பலத்த மழைக்கான `ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் வரும் நாட்களில் மலையோர பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதையடுத்து மூணாறு சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள அணைக்கட்டுகளில் சுற்றுலா படகு சவாரி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் மாட்டுப்பட்டிக்கு படகு சவாரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இடுக்கி மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மலை குன்றுகள், ஆற்றங்கரை ஓரம் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மலையோர பகுதிகளில் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.






















