உள்நோக்கத்துடன் டிவி சேனல்கள் இயங்குகின்றன...சமூகத்தில் பிரிவினையை உண்டாக்குகின்றன...உச்சநீதிமன்றம் கடும் விமர்சனம்...!
வெறுப்பு பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட பல்வேறு மனுக்களை ஒன்றாக சேர்த்து விசாரித்த உச்சநீதிமன்றம், டிவி செய்தி சேனல்களை கடுமையாக விமர்சித்துள்ளது.
நாளுக்கு நாள் வெறுப்பு பேச்சு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக, 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வெறுப்பு பேச்சு சமூகத்தில் மிக பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
உச்சநீதிமன்றம் அதிருப்தி:
ஆளும் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பேசும் வெறுப்பு பேச்சு நாட்டில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இந்த விவகாரித்தில், தொலைக்காட்சி செய்தி சேனல்கள் மீது உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தியை பதிவு செய்திருந்தது.
இந்நிலையில், வெறுப்பு பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட பல்வேறு மனுக்களை ஒன்றாக சேர்த்து விசாரித்த உச்ச நீதிமன்றம், டிவி செய்தி சேனல்களை கடுமையாக விமர்சித்துள்ளது.
சமூகத்தில் பிளவுகள்:
இந்த விவகாரத்தில் நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, "டிவி சேனல்கள் திட்டத்துடன் இயங்குகின்றன. ஒருவருக்கொருவர் போட்டி போட்டு கொண்டு செய்திகளை பரபரபாக்குகின்றன. இதன் விளைவாக, சமூகத்தில் பிளவுகளை உண்டாக்குகின்றன" என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
டிவி சேனல்களின் தற்போதைய நிலை குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள் கே.எம். ஜோசப், பி.வி. நாகரத்னா ஆகியோர் கொண்ட அமர்வு, "தொலைக்காட்சி செய்தி சேனல்கள் முதலீட்டாளர்களின் கட்டளைப்படி செயல்படுகின்றன. இது போன்ற ஒளிபரப்புகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து செய்தி ஒளிபரப்பு தர நிர்ணய ஆணையத்திடமும் (NBSA) மத்திய அரசிடமும் கேட்டுள்ளோம்.
டி.ஆர்.பி. போட்டி:
எல்லாமே டிஆர்பியால் இயக்கப்படுகிறது. சேனல்கள் அடிப்படையில் ஒன்றுக்கொன்று போட்டி போடுகின்றன. அவை, செய்திகளை பரபரப்பாக்குகின்றன. இதை எப்படிக் கட்டுப்படுத்துகிறீர்கள்? காட்சி ஊடகத்தால் சமூகத்தில் பிளவுகளை உருவாக்குகிறீர்கள்.
செய்தித்தாளை விட காட்சி ஊடகம் உங்களை அதிகம் பாதிக்கும். நமது பார்வையாளர்களே, இந்த உள்ளடக்கத்தைப் பார்க்கும் அளவுக்கு முதிர்ச்சியடைந்து உள்ளார்களா?
குற்றமிழைக்கும் தொகுப்பாளர்கள் நிகழ்ச்சியில் பங்கு கொள்ள அனுமதிக்க கூடாது. விதிகளை மீறும் சேனல்களுக்கு அதிக அபராதம் விதிக்கப்பட வேண்டும்.
Hate-Speech | 'Offending Anchors Must Be Taken Off Air; Media Should Not Create Division' : Supreme Court#SupremeCourt #Hatespeech https://t.co/mnzoAnNait
— Live Law (@LiveLawIndia) January 13, 2023
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்களே பிரச்னையில் ஒரு பகுதியாக இருந்தால் என்ன செய்ய முடியும்? செய்தி ஒளிபரப்பாளர்கள் மற்றும் டிஜிட்டல் சங்கம் பாரபட்சமாக இருக்கக் கூடாது. எத்தனை முறை குற்றமிழைத்த நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது" என தெரிவித்தது.