(Source: ECI/ABP News/ABP Majha)
Gujarat Election 2022: இந்திரா வழியில் ராகுல்: காங்கிரஸில் இணைகிறாரா ஜிக்னேஷ் மேவானி?
இவர்கள் காங்கிரஸில் சேர்வது பாரதிய ஜனதாவுக்கு அடியோ இல்லையோ இடதுசாரிகளுக்கு இடியாக இறங்கியுள்ளது.
தேசிய கட்சிகளான பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் மாநிலங்கள் அளவில் கட்சிகளில் பெரிய அளவில் மாற்றங்களைக் கொண்டு வந்து கொண்டிருக்கின்றன. ராஜஸ்தான் பஞ்சாப்பில் காங்கிரஸ், கர்நாடகா குஜராத்தில் பாரதிய ஜனதாவும் ஆட்சி அளவில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்துகொண்டிருக்கின்றன. 2022ல் நடைபெறவிருக்கும் குஜராத் மாநில சட்டசபைத் தேர்தல் 2024ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய இரண்டும்தான் இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்த வரிசையில் இடதுசாரியின் இளைய தலைமுறைத் தலைவர்கள் இருவரை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொள்ள இருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
குஜராத் மாநில சுயேட்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி மற்றும் பீகாரின் கம்யூனிஸ்ட் உறுப்பினரான கன்ஹயா குமார்தான் அந்த இருவரும் எனக் கூறப்படுகிறது.
இருவரும் காங்கிரஸில் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றும் எந்த தேதியில் இணைகிறார்கள் என்பதுதான் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையேதான் அண்மையில் கண்ஹையா குமார் அண்மையில் பிரியங்கா காந்தியைச் சந்தித்து உள்ளார். பிரியங்காவுடனான இந்த சந்திப்பை ஒருங்கிணைத்தது பிரசாந்த் கிஷோர். இவரும் காங்கிரஸில் இணைய உள்ளார் எனச் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் போராட்டத்தில் தேசத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதாக கன்ஹையா குமாரை மத்திய அரசு சிறைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் காங்கிரஸில் சேருவது உறுதியாகி இருப்பதை அடுத்து பீகார் காங்கிரஸில் அவருக்கு பெரிய பொறுப்பு கொடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. மற்றொரு பக்கம் குஜராத்தின் உனா கலவரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றுதிரட்டியக் குரலாக இருந்தவர் ஜிக்னேஷ் மேவானி. அந்த மாநிலத்தின் வட்காம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். சுயேட்சை எம்.எல்.ஏ என்றாலும் அவர் கிட்டத்தட்ட காங்கிரஸின் அங்கம்தான் என்கின்றனர் அந்த மாநில காங்கிரஸ் தலைவர்கள். இந்த இரண்டு இளைய தலைமுறைகள் காங்கிரஸில் இணைவது பாரதிய ஜனதாவுக்குச் சிக்கலாக உள்ளதோ இல்லையோ ஆனால் இடதுசாரிக் கட்சிகளை பலவீனமடையச் செய்யும் என கவலை கொண்டுள்ளனர் அந்தந்த மாநில இடதுசாரிகள். வருகின்ற செப் 28 பகத்சிங் பிறந்த தினத்திலோ அல்லது அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி தினத்திலோ இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
70களில் புதிய காங்கிரஸ் கட்சியை உருவாக்கும் முனைப்பில் இருந்த இந்திரா காந்தி பல இடதுசாரி இளைஞர்களைக் கட்சியில் சேர்த்தார். தற்போது அதே பாணியை ராகுல் காந்தியும் கையில் எடுத்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
also read: வந்த வேகத்தில் பெவிலியனுக்கு திரும்பிய வார்னர்..! ஹைதராபாத்திற்கு ஆரம்பமே அதிர்ச்சி..