முட்டாள்தனத்தின் உச்சம்...இருமலில் தவித்த 2 மாத குழந்தை...சிகிச்சை அளிப்பதாகக் கூறி சூடு போட்ட போலி மருத்துவர்..!
அந்த போலி மருத்துவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராகவும் குழந்தையின் தாய்க்கு எதிராகவும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் போர்பந்தர் மாவட்டத்தில் இருமலுக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி இரண்டு மாத குழந்தைக்கு இரும்பை கொண்டு சூடு போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அந்த போலி மருத்துவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராகவும் குழந்தையின் தாய்க்கு எதிராகவும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
அக்குழந்தை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர் கண்காணிப்பில் உள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து விரிவாக பேசியுள்ள காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுர்ஜித் மெஹெது, "ஒரு வாரத்திற்கு முன்பு, குழந்தை இருமல் மற்றும் சளியால் பாதிக்கப்பட்டது. அவருடைய பெற்றோர் வீட்டிலேயே சிகிச்சை அளிக்க முயன்றனர். ஆனால், அவரின் உடல் நிலை சரியாகவில்லை. அதன்பிறகு, குழந்தையின் தாய் அவரை தேவராஜ்பாய் கட்டாராவிடம் அழைத்துச் சென்றார்.
இதையடுத்து, அக்குழந்தையின் மார்பு மற்றும் வயிற்றில் இரும்பை கொண்டு கட்டாரா சூடு போட்டதாகக் கூறப்படுகிறது. அப்படியும் அந்த குழந்தைக்கு உடல் நிலை சரியாகவில்லை. பின்னர், பெற்றோர் குழந்தையை போர்பந்தரில் உள்ள பவ்சின்ஜி பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.
குழந்தையின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 324 (இறப்பை ஏற்படுத்தக்கூடிய ஏதேனும் கருவி மூலம் தானாக முன்வந்து காயப்படுத்துதல்) மற்றும் பிற விதிகளின் கீழ் கட்டாரா மற்றும் குழந்தையின் தாய் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
போர்பந்தரில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளது" என்றார்.
குழந்தையின் உடல் நிலை குறித்து மருத்துவர் ஜெய் பதியானி செய்தியாளர்களிடம் பேசுகையில், "குழந்தை மூச்சுத்திணறல் சிக்கல்களுடன் பிப்ரவரி 9 ஆம் தேதி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. அவர் ஐசியூவில் ஆக்ஸிஜன் உதவியுடன் வைக்கப்பட்டார்.
சிகிச்சையின் போது அவர் மார்பில் சூடு போடப்பட்டிருப்பதைக் கண்டோம். இது அவரது சிக்கல்களை அதிகரித்தது" என்றார்.
இந்த மாதத்தின் தொடக்கத்தில், மத்தியப் பிரதேசத்தின் ஷாதோல் மாவட்டத்தில் பேயோட்டுபவர் என சொல்லி கொண்டு இரண்டரை மாத பெண் குழந்தைக்கு 50 முறைக்கு மேல் சூடு போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மாதிரியான மூட நம்பிக்கை செயல்கள் தொடர்ந்து கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.