(Source: Poll of Polls)
GST rate: பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு வரி - ஜிஎஸ்டியால் எகிறப்போகும் மாதாந்திர பட்ஜெட்!
அத்தியாவசியப் பொருட்களின் மீது 5% ஜிஎஸ்டி விதிப்பானது, ஜூலை 18ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
அண்மைக் காலங்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. பணவீக்கமும் இதற்கு ஒரு முக்கிய காரணம். அண்மையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது கூட்டம் நடைபெற்றதில் பல முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில் அத்தியாவசிய பொருட்களின் மீது 5% ஜிஎஸ்டி விதிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஜிஎஸ்டி விகித உயர்வு ஜூலை 18ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
பேக்கிங் செய்யப்பட்ட பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி :
பிராண்டிங் மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட தயிர், பால், பன்னீர், லஸ்ஸி, சீஸ், கோதுமை மாவு, அரிசி, வெள்ளம், தென், அப்பளம், மீன், இறைச்சி போன்ற பல அத்தியாவசிய பொருட்களின் மீதும் இந்த ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதால் அதன் விலை உயரும். இது சாமானிய மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் இந்த 5% ஜிஎஸ்டி விதிப்பானது, பிராண்டிங் மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களுக்கு மட்டும் தான் பொருந்தும். பிராண்டிங் மற்றும் பேக்கிங் செய்யப்படாத பொருட்களில் எந்த ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
லீகல் மெட்ராலஜி சட்டத்தின் படி முன்னரே பேக்கிங் செய்யப்பட்ட அல்லது லேபிளிடப்பட்ட தயிர், மோர் மற்றும் பன்னீர் ஆகிய பொருட்களின் மீது முன்னர் விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த பொருட்களின் மீதும் ஜூலை 18ம் தேதி முதல் 5% ஜிஎஸ்டி விதிக்கபடும் என கிளியர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அர்ச்சித் குப்தா தெரிவித்தார். இது சாமானியர்களின் விலை சுமையை தான் அதிகம் பாதிக்கும்.
ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட பொருட்கள்:
ஜிஎஸ்டி விகிதம் திருத்தப்பட்டதால் சில பொருட்களின் விலை உயர்ந்தாலும் சில பொருட்களின் விலை சற்று குறையவும் வாய்ப்புள்ளது. விற்பனையாளர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இறக்குமதி செய்யும் சில குறிப்பிட்ட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விலக்கப்பட்டுள்ளது. ஆபரேட்டர்கள் உடன் இணைக்கப்பட்ட சரக்கு வண்டிகளின் வாடகைக்கு வழங்கப்பட்டு வந்த ஜிஎஸ்டி வரி 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கண்களுக்கான லென்ஸ், எலும்பு முறிவிற்கு பயன்படுத்த கூடிய சாதனங்கள், உடலில் பொருத்தப்படும் செயற்கை பாகங்கள் உள்ளிட்ட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைய கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கலக்கத்தில் மக்கள்:
அத்தியாவசியப் பொருட்களின் மீது ஜிஎஸ்டி விதிக்கப்படுவதால் சாமானிய மக்களின் மாதாந்திர பட்ஜெட் நிச்சயம் ஏறப்போவதை எண்ணி மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.