(Source: ECI/ABP News/ABP Majha)
GST collection in April: அடேங்கப்பா..! உச்சம் தொட்ட ஜிஎஸ்டி வரி வசூல்.. இதுவரை இல்லாத அளவுக்கு சாதனை..!
ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இதுவரை வசூல் செய்யப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும்.
கடந்த மாதம், ஜிஎஸ்டி வரியாக 1.87 லட்சம் கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இதுவரை வசூல் செய்யப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும். இதற்கு முன்பு, கடந்த 2022ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், அதிகபட்ச ஜிஎஸ்டி தொகை வசூல் செய்யப்பட்டது.
உச்சம் தொட்ட ஜிஎஸ்டி வரி வசூல்:
அதை காட்டிலும் தற்போது 19.495 கோடி ரூபாய் அதிகம் வசூல் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் வசூல் செய்யப்பட்டதை விட 12 சதிவிகிதம் அதிகமான தொகை இந்தாண்டு ஏப்ரல் மாதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த மாதம் 20ஆம் தேதி, 68 ஆயிரத்து 228 கோடி ரூபாயை ஜிஎஸ்டி வரியாக மத்திய வசூல் செய்தது. இது, ஒரு நாளில் வசூல் செய்யப்பட்ட அதிகபட்ச தொகையாகும்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "இந்த மாதத்தில், உள்நாட்டு பரிவர்த்தனைகளின் வருவாய் (சேவைகளின் இறக்குமதி உட்பட) கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்த ஆதாரங்களில் இருந்து வந்த வருவாயை விட 16 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது.
ஜிஎஸ்டி வசூலில் அதிகபட்ச வளர்ச்சியை கண்ட சிக்கிம்:
சிக்கிமின் ஜிஎஸ்டி வருவாய் வசூல் மாநிலங்களிலேயே அதிகபட்ச வளர்ச்சியை கண்டுள்ளது. கடந்த மாதம், 61 சதவீதம் வளர்ச்சி கண்டு ஜிஎஸ்டி வருவாய் வசூல் 426 கோடியாக பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டு இதே மாதம், 264 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வருவாயாக வசூல் செய்யப்பட்டுள்ளது.சிக்கிமின் ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சி சதவீதம் அதிகமாக இருந்தாலும், தமிழ்நாடு, மகாராஷ்டிரா குஜராத் போன்ற பெரிய மாநிலங்களில் வசூல் தொகையை விட குறைவு.
குஜராத்தில் 11,721 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, இதே மாதத்தில் வசூலிக்கப்பட்ட தொகையை விட இது 4 சதவீதம் உயர்வு. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், 11,264 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டது.
ஹரியானாவில் இந்த ஏப்ரலில் 10,035 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தை விட 22 சதவீத வளர்ச்சியாகும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், 8,197 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது.
ஜிஎஸ்டி வரி வருவாயை மத்திய அரசு மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்து வருகிறது. மாநிலங்களின் கரத்தை வலுப்படுத்த மூலதனம் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிடுவதற்காக இந்தத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது 14-வது தவணையாக தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் ரூ.1 லட்சத்து 40,318 கோடியை மத்திய அரசு சமீபத்தில் விடுவித்தது.
ஜிஎஸ்டி வரி பகிர்வாக தமிழ்நாட்டுக்கு ரூ.5,769 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.