EDLI Scheme | கொரோனாவால் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தால் EDLI திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம்.. யாருக்குப் பொருந்தும்?
கொரோனா தொற்று மட்டுமில்லாமல் வேறு எந்த காரணத்தினால் உயிரிழந்தாலும் இந்த இழப்பீடு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்றினால் ஏராளமானோர் தினமும் உயிரிழந்துவரும் நிலையில், பல்வேறு தனியார் நிறுவன ஊழியர்களும் இந்த கொரோனா தொற்றினால் பலியாகி வருகின்றனர். இந்நிலையில் வருமானம் ஈட்டும் ஒருவரை இழந்த நிலையில் அவர்களது குடும்பம் நிர்கதியாக நிற்கும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. இந்த இக்கட்டான சூழலில், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உதவும் வகையில் தொழிலாளர் வைப்புசார் காப்பீடு (EDLI) திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கும் நடவடிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி எந்த வகையில் இழப்பீடு தொகையினை பெறலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். பொதுவாக நிறுவனங்கள், பணிபுரியும் ஒவ்வொரு ஊழியரின் காப்பீட்டுக்காக அவரது அடிப்படை சம்பளத்தில் 0.50 சதவிகிதத் தொகையை மாதந்தோறும் செலுத்தி வருகின்றனர். கொரோனா தொற்று மட்டுமில்லாமல் வேறு எந்த காரணத்தினால் உயிரிழந்தாலும் இந்த இழப்பீடு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
இதோடு தொழிலாளரின் அடிப்படைச் சம்பளம் மாதம் ரூபாய் 15 ஆயிரத்துக்குக்கீழ் உள்ளவர்களின் குடும்பத்துக்கு, அவர்கள் பெறும் சம்பளத்துக்கு ஏற்ப இழப்பீடு தரப்படுகிறது. அவர்களுக்கு குறைந்தபட்ச இழப்பீடு தொகையாக ரூ.2.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த இழப்பீடு தொகையினை தொழிலாளர்கள் பெற வேண்டும் என்றால், இடிஎல்ஐ திட்டத்தின்கீழ் பிஎஃப் சந்தாதாரர் ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும்
மேலும் அதிபட்ச தொகையாக ரூ.7 லட்சம் வரை இழப்பீடு தொகையினை தருகிறது. ஆனால் இந்த இழப்பீடு தொகையினை தொழிலாளர்கள் பெற வேண்டும் என்றால், இடிஎல்ஐ திட்டத்தின்கீழ் பிஎஃப் சந்தாதாரர் ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓராண்டுக்கு குறைவாக பணிபுரிந்திருந்தால் எவ்வளவு பிஎஃப் தொகை கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதோ அந்த தொகை தான் தரப்படும் எனவும் நடைமுறையில் உள்ளது.
கொரோனா தொற்றினால் உயிரிழந்த ஒருவரின் குடும்பம் எப்படி பணத்தினை பெறமுடியும்?
இறந்தவர்களின் சட்டப்பூர்வ வாரிசு இந்த தொகையினை பெற முடியும் என கூறப்படுகிறது. அதாவது ஊழியர்கள் தங்களுடைய நிறுவனத்தில் பணிபுரியும் போதே யார் இவர்களுக்கு அடுத்த வாரிசு என்பதை தெரிவித்திருப்பார்கள். அதனை வைத்து யார் சட்டப்படியான வாரிசு என்பதை தெரிந்து கொள்ளலாம். அவர்கள் தான் இழப்பீடு தொகையினை முழுமையாக பெற முடியும் என கூறப்படுகிறது. இதற்காக EDLI படிவம் 5 IF ஐ முறையாக பூர்த்தி செய்து உரிமைகோருபவர் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த உரிமைகோரல் படிவத்தில் முதலாளியால் கையொப்பமிடப்பட்டு சான்றளிக்கப்பட வேண்டும். ஒரு வேளை நிறுவனத்திற்கு சென்று முதலாளி இல்லை முதலாளியின் கையொப்பத்தைப் பெற முடியாவிட்டால் பின்பவரும் சான்றிதழ்களை குடும்பத்தினர் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்படுகிறது.
அதில்,
சேமிப்பு கணக்கு வைத்துள்ள கிளையின் வங்கி மேலாளர்
உள்ளூர் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ.
வர்த்தமானி அதிகாரி
மாஜிஸ்திரேட்
உள்ளூர் நகராட்சி வாரியத்தின் உறுப்பினர் / தலைவர் / செயலாளர்
போஸ்ட் மாஸ்டர் அல்லது சப்-போஸ்ட் மாஸ்டர்
ஈபிஎஃப் அல்லது சிபிடியின் பிராந்திய குழுவின் உறுப்பினர்
ஆகியோரின் கையொப்பத்தினை பெற்று அதனை ஈபிஎஃப் ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் இத்துடன் ஏற்கனவே இறந்தவரின் பிஎப் கணக்கில் உள்ள பணம் உள்பட இதர பயன்களைப் பெற படிவம் 20 (பிஎஃப் தொகை), படிவம் 10டி (ஓய்வூதியம்) ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். அதிகபட்சம் ஒரு வாரத்துக்குள் இந்த இழப்பீட்டுத் தொகை கிடைக்க தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. விண்ணப்பதாரர்கள் அளிக்கும் வங்கிக் கணக்கில் நேரடியாக இழப்பீடு தொகை ஒரு வாரத்தில் செலுத்தப்படுகிறது.
Also Read: இ பதிவுக்கு விண்ணப்பிப்பது எப்படி?