Cigarette Price: புகை பிடிப்போருக்கு பேரதிர்ச்சி: இனி ஒரு சிகரெட் விலை ரூ.72- எப்போது முதல் அமல்?
புகை பிடிப்பது உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்பதைத் தாண்டி, தற்போது பொருளாதார ரீதியாகவும் அது பெரும் சுமையாக மாறியுள்ளது.

புகை பிடிப்பவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர உள்ளது.
இதனால் புகை பிடிப்பது உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்பதைத் தாண்டி, தற்போது பொருளாதார ரீதியாகவும் அது பெரும் சுமையாக மாறியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கலால் வரிச் சட்டத்திருத்தத்தின் (Excise Law Amendment) விளைவாக, சிகரெட் விலை4 மடங்கு அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
விலை உயர்வு விவரம்
நாடாளுமன்றத்தில் அண்மையில் புகையிலைப் பொருட்களுக்குக் கூடுதல் வரி விதிப்பதற்கான சட்டத்திருத்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. நிதி இணை அமைச்சர் பங்கஜ் செளத்ரி இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இதன் எதிரொலியாக, சந்தையில் தற்போது சராசரியாக ரூ.18-க்கு விற்கப்படும் ஒரு சிகரெட்டின் விலை, இனி ரூ.72-ஆக உயர வாய்ப்புள்ளது.
25% முதல் 100% வரை வரி உயர்வு
புகையிலைப் பொருட்களின் மீதான வரியை 25 சதவீதத்தில் இருந்து 100 சதவீதத்திற்கு உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் தீவிர வரி உயர்வே சிகரெட் விலை தாறுமாறாக உயர்வதற்குக் காரணமாகும். இதன்மூலம் 1000 ஸ்டிக் சிகரெட்டுகள் 200 முதல் 735 ரூபாயில் இருந்து 2700 ரூபாய் முதல் 11 ஆயிரம் வரை உயர வாய்ப்புள்ளது. அதேபோல மெல்லும் புகையிலைப் பொருட்களுக்கான 25 சதவீதம் அதிகரித்து 100 சதவீதமாக அதிகரிக்கக் கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
என்ன காரணம்?
- சுகாதார நோக்கம்: இந்தியாவில் புகையிலைப் பயன்பாட்டால் ஏற்படும் புற்றுநோய் மற்றும் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்தவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் வருங்காலச் சந்ததியினரைப் புகைப்பழக்கத்தில் இருந்து மீட்பதே இதன் முதன்மை நோக்கம்.
- உலக சுகாதார நிறுவனம்: புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க, அவற்றின் மீதான வரியை அதிகரிப்பதே மிகச்சிறந்த வழிமுறை என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்து வருகிறது. வளர்ந்த நாடுகள் பலவும் இதையே பின்பற்றுகின்றன. அதனைப் பின்பற்றியே இந்திய அரசும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
- பொருளாதாரத் தாக்கம்: இந்த விலையேற்றம் புகைப்பிடிப்பவர்களின் மாதாந்திர செலவில் பெரும் துண்டைப் போடும் என்பதால், பலர் இப்பழக்கத்தைக் கைவிடவோ அல்லது குறைக்கவோ வாய்ப்புள்ளது என மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.
நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இந்தப் புதிய விலை மாற்றங்கள் விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.






















