சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து நான்கு ஆண்டுகள் நிறைவு… ஒருநாள் அமர்நாத் பாதயாத்திரை நிறுத்தம்!
சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து இதோடு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அதனைக் கருத்தில் கொண்டு, நகரில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
சட்டப்பிரிவு 370 மற்றும் பிரிவு 35ஏ ரத்து செய்யப்பட்ட தினமான நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 5) ஜம்முவில் பாதுகாப்பு காரணங்களுக்காக அமர்நாத் யாத்திரை ஒரு நாள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
370-ஐ ரத்து செய்து நான்கு ஆண்டுகள்
கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்டு 5-ஆம் தேதி, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது பிரிவு மற்றும் 35ஏ-வை மத்திய அரசு ரத்து செய்து, காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதை எதிர்த்து அப்போது அம்மக்கள் கடுமையான போராட்டம் நடத்தினர். இந்த சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அதனைக் கருத்தில் கொண்டு, நகரில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அவ்வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு அடிவார முகாமில் இருந்து செல்லும் அமர்நாத் யாத்திரை இன்று ஒருநாள் நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு நாள் யாத்திரை ரத்து
"முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சனிக்கிழமையன்று பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து யாத்திரை இடைநிறுத்தப்படும்" என்று தனியார் செய்தி இதழிடம் உயர் அதிகாரி கூறியுள்ளார். "இந்த யாத்திரையின்போது பயங்கரவாதத் தாக்குதலுக்கு வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன, இதனால் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது" என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது
நீதிபதி சந்திரசூட் தலைமையில் விசாரணை
ஜம்மு துணை ஆணையர் அவ்னி லவாசாவும் செய்தி நிறுவனமான பிடிஐயிடம் பேசும் போது யாத்திரை ஒரு நாள் இடைநிறுத்தப்பட்ட செய்தியை உறுதிப்படுத்தினார். தற்போதும் அந்த பிரச்சனையில் ஒரு முடிவு எட்டப்படாத நிலையில் ஒரு சில பிரிவினர் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சில செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார். தற்போதைய நிலையில் படி, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, 370வது பிரிவை ரத்து செய்தது தொடர்பான மனுக்களை விசாரித்து வருகிறது.
ஜம்மு துணை ஆணையர் அவ்னி லவாசா (Twitter)
இதுவரை 4.5 லட்சம் பக்தர்கள் வழிபாடு
இதற்கிடையில், கடந்த வெள்ளிக்கிழமை 33-வது அமர்நாத் யாத்ரீகர்கள் குழு, 1,181 பக்தர்களுடன் ஜம்முவில் உள்ள அடிவார முகாமில் இருந்து தெற்கு காஷ்மீரில் உள்ள புனித கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் புறப்பட்டனர் என்று பிடிஐ தெரிவித்துள்ளது. ஜூலை 1 ஆம் தேதி யாத்திரை தொடங்கியதில் இருந்து 4.5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர் மற்றும் 62 நாள் யாத்திரை ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது