"திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும்" - கூட்டணி முறிவை தொடர்ந்து பாஜக மேலிடம் மெசேஜ்
அதிமுக கூட்டணி முறிவு குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என தேசிய தலைமை பாஜக மாநில தலைமைக்கு அறிவுறுத்தியிருந்ததாக கூறப்பட்டது.
தமிழ்நாட்டில் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு மேல் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்டது. இதைப்போன்று வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிகப்பெரிய ட்விஸ்ட் ஏற்பட்டது.
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கூட்டணி முறிவுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள். தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதில் இருந்தே, அதிமுக தலைவர்கள் பற்றி தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார்.
பாஜகவுடன் கூட்டணியை முறித்து கொண்ட அதிமுக:
சமீபத்தில் கூட, முன்னாள் முதலமைச்சர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசிய கருத்துக்கு அதிமுக தலைவர்கள் கடும் எதிர்வினையாற்றினர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் தொடங்கி செல்லூர் ராஜூ வரை, அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இச்சூழலில், நேற்று முன்தினம் சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பாஜகவுடனான கூட்டணியை முறித்தே ஆக வேண்டும். அதிமுக தலைமையில் திமுகவுக்கு எதிராக மெகா கூட்டணியை தனித்தே உருவாக்குவோம் என பெரும்பான்மை மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதோடு, 2024 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக அதிமுக அறிவித்தது. இதேபோல, 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலையும் பாஜக இல்லாமல் எதிர்கொள்ளும் என அதிமுக அறிவித்தது.
அதிமுகவை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாஜக?
அதிமுகவின் இந்த முடிவு, பாஜக தேசிய தலைவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஏன் என்றால், சமீபத்தில் நடந்த பாஜக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. கூட்டத்திற்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்ற ஐந்து கூட்டணி கட்சி தலைவர்களில் ஒருவர் எடப்பாடி பழனிசாமி.
அதேபோல, எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடிக்கு அருகே இருக்கை அளிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக, நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த பல முக்கிய மசோதாக்களுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்திருந்தது. அதிமுகவின் ஆதரவு காரணமாகவே பல முக்கிய மசோதாக்களை பாஜகவால் நிறைவேற்ற முடிந்தது.
முத்தலாக்கிற்கு எதிரான நிலைபாட்டை எடுத்திருந்தாலும் அதிமுக மக்களவை உறுப்பினர் ஓ பி ரவீந்திரநாத், அதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தார். அதேபோல, டெல்லி சட்ட மசோதாவுக்கும் அதிமுக ஆதரவு அளித்திருந்தது. இம்மாதிரியாக, அதிமுகவும் பாஜகவும் நட்பு பாராட்டி வந்த நிலையில், அதிமுகவின் முடிவு பாஜக தேசிய தலைமைக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
"திருவள்ளுவர் மண்ணில் தாமரை மலரும்"
அதிமுக கூட்டணி முறிவு குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என தேசிய தலைமை மாநில தலைமைக்கு அறிவுறுத்தியிருந்ததாக கூறப்பட்டது. அதேபோல, கூட்டணி விவகாரத்தில் தேசிய தலைமை முடிவு எடுக்கும் என அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதற்கிடையே, அதிமுகவை சமாதானம் செய்ய பாஜக மூத்த தலைவர்கள் முயற்சித்ததாக தகவல் வெளியானது.
ஆனால், தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்க வேண்டும் என்பதில் அதிமுக பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பாஜக முன்னாள் மேலிட பொறுப்பாளர் முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். கூட்டணி குறித்து எழுப்பப்படும் அனைத்து விதமாக கேள்விகளுக்கும் சி.டி. ரவியின் கருத்து முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ளது.
"திருவள்ளுவர் மண்ணில் தாமரை பெரிய எண்ணிக்கையில் மலரும்" என எக்ஸ் வலைதள பக்கத்தில் ரவி பதிவிட்டுள்ளார். இதன் மூலம், வரும் தேர்தலில் பாஜக தனித்து களம் காண உள்ளது தெளிவாகிறது.