“ திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை; மிகவும் மன வேதனை” - முடி உதிர்வால் வாலிபர் தற்கொலை!
அந்த கடிதத்தில், "நாட்கள் செல்ல செல்ல எனது உடல்நிலை மோசமடைந்தது, இதன் விளைவாக பெரும் மனச்சோர்வு ஏற்பட்டது. எனது திருமணம் தள்ளிச்சென்று கொண்டே இருந்தது", என்று மனம் வருந்தி எழுதியுள்ளார்.
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள அத்தோலியைச் சேர்ந்த 29 வயதான மெக்கானிக் ஒருவர், கடுமையான முடி உதிர்வைத் தொடர்ந்து ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தனது வீட்டிலேயே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முடி உதிர்தலால் தற்கொலை
பிரசாந்தின் தற்கொலைக் கடிதம் திங்கள்கிழமை அத்தோலி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகுதான் அவரது மரணத்திற்கான காரணம் முடி உதிர்தல் என்று தெரிய வந்தது. இதுகுறித்து விசாரணை அதிகாரி பி.கே.முரளி பேசுகையில், "பிரசாந்திற்கு ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக முடி கொட்டியதாக கோழிக்கோட்டில் சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவித்துள்ளார். தாமரச்சேரியில் உள்ள ஒரு வாகன ஷோரூமில் மெக்கானிக்காகப் பணிபுரிந்து வந்த அவர், பல்வேறு சிகிச்சைகள் எடுத்துக் கொண்டும் பயனில்லை என்பதால் இந்த முடிவுக்கு வந்துள்ளார்', என்று தெரிவித்தார்.
திருமணம் தள்ளிச்சென்றது
தற்கொலைக் செய்வதற்கு முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்து சென்றுள்ளார். அதில், பிரசாந்த் 2014 ஆம் ஆண்டு முதல் முடி உதிர்தல் பிரச்சினைக்காக கோழிக்கோட்டில் உள்ள தோல் சிறப்பு மையத்தில் இருந்து மருந்துகளை எடுத்துக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த கடிதத்தில், "நாட்கள் செல்ல செல்ல எனது உடல்நிலை மோசமடைந்தது, இதன் விளைவாக பெரும் மனச்சோர்வு ஏற்பட்டது. எனது திருமணம் தள்ளிச்சென்று கொண்டே இருந்தது", என்று மனம் வருந்தி எழுதியுள்ளார்.
மருந்துகள் தான் உடலை மோசமாக்கியது
மேலும், தான் சிகிச்சை பெற்று வரும் கிளினிக்கின் பெயரையும், தவறான வாக்குறுதிகளை அளித்ததாகக் கூறும் டாக்டரையும் அவரது தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். முதலில் மருத்துவரிடம் ஆலோசித்தபோது தனக்கு சிறிய முடி உதிர்தல் பிரச்சினை மட்டுமே இருந்ததாகவும், ஆனால் கிளினிக்கிலிருந்து மருந்துகளை உட்கொண்ட பிறகு அவரது உடல்நிலை மிகவும் மோசமடையத் தொடங்கியதாகவும் அவர் தற்கொலைக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
புருவ முடியும் உதிர்ந்தது
மேலும் கடிதத்தில், "மருந்துகள் எடுத்துக்கொண்ட பிறகு, புருவ முடிகள் கூட உதிரத் தொடங்கின, இது என் மனதை முற்றிலுமாக நொறுக்கிவிட்டது. நான் இதைப் பற்றி மருத்துவரிடம் தெரிவித்தேன், ஆனால் அவர் எனக்கு மீண்டும் வேறு மருந்துகளைக் கொடுத்தார். இதனால் விழாக்களில் கலந்துகொள்வதையும் நண்பர்களை சந்திப்பதையும் நிறுத்திவிட்டேன்,” என்று எழுதியிருந்தார்.
விசாரணையில் திருப்தி இல்லை
பிரசாந்தின் மரணம் குறித்து விசாரணை நடத்த கோரி அத்தோலி போலீசில் குடும்பத்தினர் ஏற்கனவே புகார் அளித்துள்ளனர். ஆனால் ஊரக எஸ்பியிடம் புகார் அளித்தும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. விசாரணை திருப்திகரமாக இல்லை என உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதேநேரம், விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரி தெரிவித்தார். முதற்கட்ட விசாரணையின்படி, மருத்துவ அலட்சியம் எதுவும் இல்லை என்றும், வரும் நாட்களில் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்க்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050